ரூ.2000 நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி மோசடி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
பழைய இரண்டாயிரம் ரூபாய் கருப்பு பணத்தை மாற்றி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

சென்னை ராயப்பேட்டையில் பாகிஸ்தானில் இருந்து இரண்டாயிரம் ரூபாய் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், வருமான வரித்துறைக்கு ஹவாலா பணம் பரிமாறப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமானவரித்துறை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் குழந்தைகள் பயன்படுத்தும் போலி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதை அறிந்து கொண்டு, பாகிஸ்தானில் இருந்து வந்த நோட்டுகள் இல்லை என்பது தெரிய வந்ததால், தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை முடித்துக் கொண்டனர். இருப்பினும் 50 லட்ச ரூபாய் ஹவாலா பணம் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது. இதை வைத்திருந்த யாக்கூப் என்பவரை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் இது மோசடி வேலை என தெரிய வந்ததை அடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது ஒன்பதரை கோடி ரூபாய் குழந்தைகள் பயன்படுத்தும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்து சென்னை ராயப்பேட்டை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த ரசீது என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை காவல்துறையும், வருமானவரித்துறை அதிகாரிகளும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. பழைய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் என்பது நாடு முழுவதும் 20 இடங்களில் குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த இடங்களில் பழைய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் எவ்வளவு இருந்தாலும் மாற்றித் தர முடியும் எனக்கூறி ஒரு கும்பல் கருப்பு பணம் வைத்திருப்பவர்களை குறி வைத்து மோசடி செய்வதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக பழைய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பில், மூன்றில் ஒரு பங்கு பணமாக, 500 ரூபாய் நோட்டுகளாக தருவதாக கூறி ஏமாற்றுகின்றனர்.
அந்த அடிப்படையில் 10 கோடி ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் தன்னிடம் இருப்பதாக ரசீது தெரிவித்துள்ளார். அதை மாற்றுவதற்காக யாக்கூப் என்பவரை அணுகியுள்ளார். அதற்கு மூன்று கோடி ரூபாயை எடுத்து வருவதாக யாகூப் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக யாக்கூப், ஐம்பது லட்சம் ரூபாயை முன் பணமாக கொடுப்பதற்காக ராயபேட்டைக்கு எடுத்து வந்துள்ளார்.
அதன் பின்பு ரஷித், போலியான குழந்தைகள் பயன்படுத்தும் பணத்தை கொடுத்து யாக்கூப்பை ஏமாற்ற முயன்றது தெரியவந்துள்ளது. சிக்கிய யாக்கூப், எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்கி மாற்றித் தருகிறார் என்பது குறித்து வருமான வரித்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், யாக்கூப்பிடம் தொடர்பில் இருக்கும் நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, ரசீது பின்புலத்தில் இருக்கும் நபர்கள் குறித்தும் சென்னை ராயப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






