நடிகை செளந்தர்யா விவகாரம்: ரஜினி நண்பர் மீது குற்றச்சாட்டு.. உண்மை என்ன?
நடிகை செளந்தர்யாவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் ஆதாரமற்று என்று செளந்தர்யாவின் கணவர் ரகு தெரிவித்துள்ளார்.

நடிகை செளந்தர்யா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அப்போது அவர் திரையுலகின் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி நடிகை செளந்தர்யா பெங்களூருக்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றபோது விமான விபத்தில் உயிரிழந்தார். இவரது இறப்பு தமிழ், தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 22 வருடங்களுக்குப் பிறகு தற்போது நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, அது கொலை என ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த கொலையில் ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகர் மோகன் பாபுவிற்கு தொடர்பு இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, நடிகை செளந்தர்யா ஜல்பள்ளி கிராமத்தில் உள்ள நிலத்தை பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு பெற நினைத்துள்ளார்.
அந்த நிலத்தை செளந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் விற்பனை செய்வதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அவரின் மரணத்திற்குப் பிறகு அந்த நிலத்தை விற்பனை செய்யுமாறு அழுத்தம் கொடுத்து அந்த நிலத்தை சட்டவிரோதமாக பிரபல நடிகர் மோகன் பாபு ஆக்கிரமித்திருக்கிறார் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அரசாங்கம் அந்த நிலத்தை கையகப்படுத்தி ஆசிரமங்களுக்கும், ராணுவ அதிகாரிகள் குடும்பத்திற்கு வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.
நடிகை செளந்தர்யா கணவர் விளக்கம்:
நடிகை செளந்தர்யா மரணம் குறித்த புகார் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமூக வலைதளத்தில் பரவி வரும் செய்தி முற்றிலும் தவறானது என செளந்தர்யாவின் கணவர் ரகு தெரிவித்துள்ளார். அதன்படி, “செளந்தர்யா மரணம் குறித்து வெளியாகும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். செளந்தர்யா மரணத்திற்கு பிறகு நாங்கள் எந்தவிதமான சொத்துக்களையும் விற்கவில்லை.
எங்களிடமிருந்து சட்டவிரோதமாக மோகன் பாபு எந்த சொத்தையும் பறிக்கவில்லை. நடிகர் மோகன் பாபுவுடன் 25 வருடங்களுக்கு மேலாக நல்ல நட்புறவில் இருக்கிறேன். எனது மனைவி மரணம் மற்றும் மோகன்பாபு தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவதை உடனே நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
What's Your Reaction?






