ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்.. பாதுகாப்பு பணிக்காக CISF போலீசார் வருகை..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு பாதுகாப்பிற்காக 3 கம்பெணியை சேர்ந்த 240 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈரோட்டிற்கு வருகை புரிந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைதேர்தலில் திமுக மற்றும் நாதக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே நேரடிப் போட்டி நடைபெறும் சூழலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றவர் திருமகன் ஈவேரா. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால், இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த இடைத்தேர்தலில் திருமகன் ஈவேராவின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். ஆனால், இவரும் கடந்த ஆண்டு (2024) இறுதியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேட்புமனுத்தாக்கல், கடந்த ஜனவரி 17 ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ளது.இதற்காக 57வாக்குச்சாவடி மையத்தில் 237வாக்குச்சாவடிகளில் 2லட்சத்து 26ஆயிரத்து 433வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் 47வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கேரளா, நெய்வேலி, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சிஆர்பிஎப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 240 பேர் ஈரோட்டிற்கு வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும், தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்கள், எல்லையில் உள்ள சோதனைச்சாவடி உள்ளிட்ட இடங்களிலும், வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று, பதற்றமான மற்றும் வாக்காளர்கள் அதிகமாக உள்ள வாக்குச்சாவடியிலும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
What's Your Reaction?