சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நீதிமன்றம் உத்தரவு..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கொண்டு வரப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு காவல்துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நீதிமன்றம் உத்தரவு..!](https://kumudamnews.com/uploads/images/202501/image_870x_678f964a8ded3.jpg)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதனை படித்த நீதிபதிகள், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இந்த விவகாரத்திற்கு பின்னர் உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பை பலப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு வழக்கறிஞர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்றத்திற்கு வருபவர்களை சோதனையிடுவது என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வெடிகுண்டு எதுவும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்படவில்லை எனவும் அது தவறான குற்றச்சாட்டு எனவும் வாதிட்டனர்.
இதனையடுத்து நீதிபதிகள், உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்ட வெடிகுண்டு வெடித்திருந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் யோசிக்கும் வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள் இது அனைவரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என தெரிவித்தனர்.
எனவே பாதுகாப்பை பலப்படுத்துவது முக்கியமானது எனக்கூறிய நீதிபதிகள் இது குறித்து தமிழ்நாடு காவல்துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியோர் தங்களது பரிந்துரைகளை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தனர்.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)