சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரம் தொடர்பாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி மேற்பார்வையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணை கோப்புகள் மாயமான விவகாரத்தில் சிறப்பு புனாய்வு அமைக்கக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை முன்னதாக விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட துறை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த முறை உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிலைக்கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரத்தில் தமிழ்நாடு உள்துறை செயலாளரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கோப்புகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ஒரே FIR எண்ணின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. அப்போது, மனுதாரர் யானை ராஜேந்திரன் இந்த விவகாரத்தில் இரண்டாவதாக ஏன் FIR பதிவு செய்ய வேண்டும்? அதில் தான் சந்தேகம் எழுகிறது.
மேலும் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை என வழக்குகள் கைவிடப்பட்டதாக கூறப்படுவது சட்டவிரோத நடவடிக்கை ஆகும். ஏனெனில் நீதிமன்றம் மூலம் மட்டுமே வழக்கை கைவிட்டதாக அறிவிக்க முடியும். அதேபோல் சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரம் தொடர்பாக 2017-ல் அப்போதைய விசாரணை அதிகாரி கடிதம் எழுதியுள்ளார் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், இந்த கோப்புகள் மாயமான விவகாரத்தில் எவரையும் கண்டு பிடிக்க முடிவில்லை என கூறியுள்ளீர்கள் ? சில வழக்கு கைவிடப்பட்டதாகவும் கூறியுள்ளீர்கள், இது என்ன? என்று தமிழக அரசிடம் வினவினார். அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், சிலை திருட்டு வழக்கு சம்மந்தப்பட்ட கோப்புகள் காணாமல் போன விவகாரத்தில் பதியப்பட்ட சில FIR மீது உரிய விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த சிலை கடத்தல் பிரிவில் அப்போது இருந்த காவல்துறை அதிகாரிகள் பணி மாற்றம் பெற்று சென்றுள்ளனர். அதனால் கோப்புகள் மாயமான விவகாரத்தில் இதுவரை யாரையும் அடையாளம் காண முடியவில்லை என்று தெரிவித்தார். மேலும் சிலை கடத்தல் தொடர்பான 41 ஆவணங்கள் காணவில்லை என மனுதாரர் கூறுவது தவறானது, 11 வழக்கு ஆவணங்கள் தங்களிடம் உள்ளன, அதை வைத்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
ஆனால் அந்த வாதம் திருப்திகரமானதாக இல்லை என தெரிவித்த நீதிபதிகள், சிலை கடத்தல் கோப்புகள் மாயமானது தொடர்பான வழக்கை ஒரு மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரை இன்றில் இருந்து ஒரு வார காலத்திற்குள் மாநில அரசு நியமனம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த ஐ.பி.எஸ் அதிகாரி வழக்கு விசாரணையை விரிவாக மேற்கொண்டு அறிக்கையை ஏப்ரல் முதல் வாரத்துக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
What's Your Reaction?






