கேள்விகளால் துளைத்தெடுத்த கவுன்சிலர்கள்.. நெஞ்சுவலியால் துடித்த கும்பகோணம் மேயர்..!
கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் தரையில் உருண்டு புரண்டதைப் பார்த்த பலரும் அவருக்கு உண்மையிலேயே நெஞ்சுவலி வந்ததா? அல்லது கவுன்சிலர்கள் கேள்வி கேட்டதால் தப்பிக்க கையாண்ட யோசனையா.? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் தரையில் நேற்று நடைபெற்ற மாமன்றக்கூட்டத்தில், நெஞ்சு வலிப்பதாகவும், தன்னை காப்பாற்றுங்கள் என்று கதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் நேற்று (டிச.30) திங்கட்கிழமை என்பதால் கூட்ட அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மேயர் சரவணன் தலைமை வகித்தார். மேலும் துணை மேயர் சு.ப. தமிழழகன், ஆணையர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ் என அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். அப்போது திமுக கவுன்சிலர்கள் ஆசைதம்பி, திவ்யபாரதி, முருகன், சோடா கிருஷ்ண மூர்த்தி, அனந்தராமன், குட்டி தட்சிணாமூர்த்தி ஆகியோர் மேயர் சரவணனிடம் தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்து தொடர்ந்து எடுத்துரைத்தனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அய்யப்பன் என்ற உறுப்பினர் தஞ்சாவூர் எம்.பி., சுதா மக்களை சந்திப்பதற்காக மாநகராட்சி ஏற்பாட்டில் அலுவலகம் அமைத்து தரவேண்டும் என மேயருக்கு தபால் கொடுத்துள்ளதற்கு பதில் அளிக்காதது பற்றி கேள்வி எழுப்பினார். அப்போது அதற்கு மேயர் சரவணன் அது சாதாரண கடிதம் தான். முறையாக எனக்கு பதிவு தபாலில் வரவில்லை. எனவே அந்த கடிதத்திற்கு என்னால் பதிலளிக்க முடியாது எனத் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்வம், மதிமுக கவுன்சிலர் பிரதீபா உள்ளிட்டோரும் தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பது குறித்து மேயர் சரவணனிடம் கேள்வி எழுப்பினர்.
கவுன்சிலர்கள் மேயரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், செய்வதறியாது திகைத்த மேயர் சரவணன் அமைதியாக இருந்தார். திமுக கவுன்சிலர்கள், தொடர்ந்து, மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட கோப்புகள் பற்றியும், அதில் நீங்கள் கையெழுத்திட்டீர்களா? கோப்புகளை உடனடியாக மற்றவர்கள் பார்வைக்கு சமர்பிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு மேயர் சரவணன், கூட்டம் இத்துடன் ஒத்திவைக்கப்படுவதாகவும், நாளை கோப்புகளை கொண்டு காட்டுகிறேன் என்று கூறினார். ஆனால் கவுன்சிலர்கள் உடனடியாக காட்ட வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்ததால், என்ன செய்வதென்று தெரியாமல் திணறிய மேயர் சரவணன் திடீரென நெஞ்சு வலிப்பதகாவும், தன்னை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூறி அலறினார். இந்த சம்பவம் மாநகராட்சி கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சினிமாவில் மட்டும் தான் அரசியல்வாதிகள், தலைவர்கள் இதுபோன்ற நேரங்களில் நெஞ்சுவலி என்பதை பார்த்திருக்கிறோம். நேரில் முதன்முறைப்பார்க்கிறோம் என்று கவுன்சிலர்கள் முனுமுனுத்தவாறு சென்றனர். உண்மையிலே நெஞ்சுவலி வந்ததா? இல்லை அடுத்தடுத்த கேள்விகளினால் இப்படி திடீர் நெஞ்சுவலி வந்ததா? என்று கேள்வி எழுப்பட்டது. இதனையடுத்து மேயர் சரவணன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
What's Your Reaction?