இன்னைக்கு மெரினாக்கு போறீங்களா.. இந்த ரூட்டில் போகாதீங்க.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விபத்தில்லாமல் பாதுகாப்புடன் நடைபெற போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் ஆங்கிலப்புத்தாண்டான நாளை தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனைவரும் தயாராகி வருகின்றனர். 2024.. இன்றுடன் விடைபெறும் நிலையில், 2025-ம் ஆண்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இளைஞர் பைக் ரேஸ் போன்றவற்றில் ஈடுபடாமல் இருக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
டிரோன் கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர். பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுக்கள் வெடிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.
மெரினாவில் போக்குவரத்துக்கு தடை புத்தாண்டை கொண்டாடுவதற்கு மெரினா காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகளவில் திரள்வார்கள் என்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடற்கரை உட்புற சாலை இன்று (டிச.31) 7.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும் என்றும், காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 08.00 மணி முதல் நாளை 06.00 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும்.
அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு மந்தவெளி, ஆர்.ஏ.புரம் 2வது மெயின் ரோடு, ஆர்.கே மட் ரோடு, லஸ் மயிலாப்பூர் வழியாக செல்லலாம்.
டாக்டர் ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்.கே.மட் சாலை, லஸ் சந்திப்பு. மந்தவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் ஹை ரோடு மற்றும் கிரீன்வேஸ் சாலைக்கு செல்லலாம்.
மேலும், உட்புற சாலையில் வாகனங்கள் நிறுத்தவும் அனுமதிக்கப்படாது. மேலும் அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி சாலை. முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட், அண்ணாசாலை வழியாக செல்லலாம். வாலாஜா சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது. கொடிமரச் சாலையில், இரவு 08.00 மணி முதல் வாலாஜா பாயிண்டிலிருந்து போர் நினைவுச்சின்னம் நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
கிரீன்வேஸ் பாயிண்டிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகள் ஆர்கே மட் யூ-திருப்பத்தில் திரும்பி, திருவேங்கடம் தெரு, தேவநாதன் தெரு, ஆர்கே மடம் சாலை, வெங்கடேஸ்வர அக்ரஹாரம் தெர நாகேஸ்வர பூங்கா வழியாக செல்லலாம். வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் அனைத்து மாநகர பேருந்துகளும் ஆ.ர்.பி சுரங்கபாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் இன்றிரவு 10 மணி முதல் 1- ந்தேதி அன்று 6 மணி வரை மூடப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட வருவோர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு 17 இடங்களை போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
போக்குவரத்து காவல்துறை, ANPR கேமராக்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களின் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றன இக் கேமராக்கள் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து, வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் புத்தாண்டை முன்னிட்டு வாகனம் ஓட்டுதல் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் மூவர் செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஒலி மாசு ஏற்படுத்துதல் போன்றவற்றை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
எனவே அனைத்து வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை கடைபிடித்து, புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடுவதுடன் சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
What's Your Reaction?