ஆளுநர் தேவையா அன்று.. ஆளுநருடன் சந்திப்பு இன்று..
தவெக மாநாட்டில் ஆளுநரே தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, தற்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தவெக தலைவர் விஜய் மனு அளித்துள்ளார். இது தான் தற்போது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறியாக்கி இருப்பதாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. புதிதாக அரசியல் கட்சியை தொடங்கிய தவெக தலைவர் விஜய்யும் jனது கண்டனங்களை பதிவு செய்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், கூடவே வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடப்பதாக கடிதம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய்.
அதில், எல்லா சூழல்களிலும் அண்ணனாகவும், அரணாகவும் உறுதியாக நிற்பேன் எனவும் நம்மை ஆளும் ஆட்சியாளர்களிடம் பாதுகாப்பு குறித்து எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கடிதம் வெளியிட்டதோடு நிறுத்திவிடுவார் என்று பார்த்தால், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து, மனு அளித்து களத்திலும் இறங்கியிருக்கிறார் விஜய்.
அந்த மனுவில் “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பிரச்சனைக்காக ஆளுநரை சந்தித்த இதே விஜய்யின் முன்னிலையில் தான் கடந்த அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 19 தீர்மானங்களில், ’மாநில அரசின் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை’ என்ற ஒரு தீர்மான நிறைவேற்றப்பட்டது.
இப்படி மாநாட்டில் ஆளுநர் தேவையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, மாநில பிரச்னைக்காக ஆளுநரிடமே விஜய் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
What's Your Reaction?