தமிழ்நாடு

அறக்கட்டளை நடத்துகிறார்.. சம்போ செந்தில்தான் காரணம்.. காக்கா தோப்பு பாலாஜியின் தாயார் கதறல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலின் தூண்டுதலின் பேரில் தனது மகன் பாலாஜியை காவல்துறையினர் சுட்டுக் கொன்று விட்டதாக அவரது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

அறக்கட்டளை நடத்துகிறார்.. சம்போ செந்தில்தான் காரணம்.. காக்கா தோப்பு பாலாஜியின் தாயார் கதறல்
சம்போ செந்திலின் தூண்டுதலின் பேரில் பாலாஜி என்கவுன்ட்டர் - தாயார் புகார்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவு ரவுடியும், தேடப்படும் குற்றவாளியுமான சம்போ செந்திலின் எதிரியாக காக்கா தோப்பு பாலாஜி உள்ளார். கடைசியாக 2021 ஆம் ஆண்டு ஆர்கே நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்து தலைமறைவாகி விட்டார். அவர் 12 முறை மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4.50 மணியளவில் புளியந்தோப்பு பகுதியில், கஞ்சா கடத்தி சென்றபோது தான் போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது போலீசாரை நோக்கி, காக்கா தோப்பு பாலாஜி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால், தற்காப்புக்காக கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் என்கவுண்டர் செய்துள்ளார்.

இதில் காக்கா தோப்பு பாலாஜிக்கு இடது பக்க மார்பில் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதனையடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு காக்கா தோப்பு பாலாஜியின் சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்ததால், அவரது உடலானது தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிணவறைக்கு வந்த பாலாஜியின் தாயார் கண்மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளாக என் மகன் எவ்வித குற்ற சம்பவங்களிலும் ஈடுபடாமல் இருந்து வந்த நிலையில், காவல்துறையினர் வேண்டுமென்றே தன் மகனை சுட்டுக் கொன்று விட்டனர்” என்றார்.

தவிர, இஸ்லாம் கொலை வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் ஒருவரான சம்போ செந்திலை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருவதாகவும், அவரது மனைவியை கூட காவல்துறையினர் விசாரிக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் தனது மகன் பாலாஜியின் நண்பர்கள் ஆறு பேரை, சம்போ செந்தில் திட்டமிட்டு கொலை செய்துவிட்டதாகவும், தனது மகனை அவரால் கொல்ல முடியாத காரணத்தினால், காவல்துறையினரின் துணையோடு தற்போது தனது மகனை சுட்டுக்கொன்று விட்டதாக பாலாஜியின் தாயார் கண்மணி தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபடாமல், அறக்கட்டளை தொடங்கி இயலாதவர்களுக்கு உதவி செய்வது, பிறந்தநாளின் போது ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி போன்றவற்றை தொடர்ந்து செய்து வந்த தனது மகன் பாலாஜியை, உள்நோக்கம் மற்றும் சதியின் காரணமாக காவல்துறையினர் சுட்டு கொன்றுவிட்டதாக அவரது தாயார் வேதனையோடு தெரிவித்துள்ளார்.

வேலூரில் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக தினமும் நீதிமன்றம் சென்று கையொப்பமிட்டு வந்த தனது மகனை, என்கவுண்டர் செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத சூழலில் திட்டமிட்டு சதி செய்து சுட்டுக் கொன்று விட்டதாக அவர் வேதனையோடு குற்றம் சாட்டினார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நாளிலிருந்து தலைமறைவாக இருந்த சம்போ செந்தில், எனது மகன் பாலாஜி கொல்லப்பட்டுவிட்ட நிலையில் வெளியே வருவார் என்றும் அவர் தெரிவித்தார்.