தொடர் சர்ச்சையில் அன்னபூரணி.. முதலில் கோயில்.. தற்போது திருமணம்
தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறி வந்த அன்னபூரணி, ரோகித் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அன்னபூரணி என்பவர் கடந்த 2014-ல் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று தனது கணவர் மற்றும் குழந்தையை பிரிந்து காதலனான அரசு என்பவருடன் வாழ்ந்து வந்தார். இதையடுத்து, அரசு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அன்னபூரணி தனது காதலனான, அரசுவின் உருவத்தை சிலையாக வடிவமைத்து வழிபட்டு வந்தார். பின்னர் செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.
இதுமட்டுமல்லாமல், தன்னை கடவுளின் மறு அவதாரம் என்று கூறிக் கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதற்கெல்லாம் பயப்படாத அன்னபூரணி தொடர்ந்து தன்னை கடவுளின் அவதாரம் என்றே கூறி வந்தார். அடுத்த கட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ராஜா தோப்பு என்ற பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி அங்கு ஆசிரமம் அமைக்க பூமி பூஜை போட்டார்.
இதுஎல்லாம் பற்றாது என்று தனக்கு தானே கோயில் கட்டிக் கொண்டு அதற்கு கும்பாபிஷேகமும் நடத்தினார். கோயில் கும்பாபிஷேத்தின்போது அம்மன் வேடத்தில் அவதரித்த அன்னபூரணியை ஆண்கள், பெண்கள் என அனைவரும் வணங்கி வழிபாடு நடத்தினர். கோயில் கருவறைக்குள் அன்னபூரணி தன் சிலையையே வைத்து தனக்கு தானே வழிபாடு நடத்தினார். இதெல்லாம் போதாது என்று சமூக வலைதளத்தின் மூலம் அவர் உபதேசங்களையும் வழங்கி வருகிறார்.
சமீபத்தில் அன்னபூரணி தான் விரைவில் ரோகித் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிப்பை வெளியிட்டு பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்நிலையில், அன்னபூரணி அறிவித்தபடி, இன்று ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வருங்காலத்தில் அன்னபூரணி-ரோகித் இருவரும் இணைந்து, பக்தர்களுக்கு அருள் ஆசிக் கூற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அன்னபூரணியின் இந்த செயலுக்கு மக்கள் பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?