நாடாளுமன்றத்தில் சம்பவம் செய்த ராகுல் காந்தி... அதிர்ந்த பாஜக எம்.பி.க்கள்... இன்று பதில் அளிக்கிறார் பிரதமர் மோடி!
நேற்று ராகுல் காந்தி பேசியபோது பிரதமர் மோடி உள்பட பாஜகவினர் 8க்கும் மேற்பட்ட முறை குறுக்கீடு செய்தனர். ராகுலின் இந்து மதம் குறித்து பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
டெல்லி: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று அடுக்கடுக்கான கேள்விகளால் பாஜகவினரை திணறடித்தார். பிரதமர் மோடி இன்று ராகுல் காந்திக்கு பதில் அளித்து பேச உள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக நாடாளுமன்ற மக்களவை கடந்த 24ம் தேதி கூடியது. இதில் முதல் 2 நாட்களும் பிரதமர் மோடி உள்பட புதிய எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து பாஜக எம்பி ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தொடர்ந்து 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பிறகு இரு அவைகளிலும் கடந்த 28ம் தேதி ( வெள்ளிக்கிழமை) குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சிறப்புரையாற்றினார். நேற்று 2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு நாடாளுமன்றம் மீண்டும் கூடுடியது.
அப்போது மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி பிரதமர் மோடியையும், பாஜகவினரையும் கடுமையாக சாடினார்.
''நான் எதிர்க்கட்சியாக இருப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். என்னைப் பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மைதான் சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை'' என்று பேச்சின் தொடக்கத்திலேயே அதிரடி காட்டினார்.
நீட் தேர்வு முறைகேடு பேசிய ராகுல் காந்தி, ''நீட் தேர்வு பணக்கார மாணவர்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இது ஏழை மாணவர்களுக்கு உரியது அல்ல. கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது'' என அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து 'அக்னிவீர்' திட்டம் பக்கம் சென்ற அவர், ''பாஜக அரசு கொண்டு வந்துள்ள use and throw திட்டம்தான் அக்னிவீர். இது ராணுவத்துகான திட்டம் அல்ல. பிரதமர் மோடியின் திட்டம். இந்த திட்டத்தில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தால் அதை பாஜக வீர மரணமாக ஏற்காது'' என்றார்.
மேலும் ''மணிப்பூர் கலவரத்துக்கு பாஜகவே காரணம். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மணிப்பூர் செல்லாதது ஏன்?'' என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, ''பிரதமர் மோடிக்கும் கடவுளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. அவர் கடவுளுடன் நேரடியாக பேசுவார். ஆனால் மகாத்மா காந்தி குறித்து திரைப்படம் வாயிலாகத்தான் அறிந்து கொண்டேன் என அறியாமையுடன் கூறுவார்'' என கிண்டல் செய்தார்.
தனது பேச்சின் உச்சக்கட்டமாக சிவபெருமானின் படத்தை எடுத்து காண்பித்த ராகுல் காந்தி, ''சிவனிடம் உள்ள திரிசூலம் ஆயுதம் அல்ல; அது அகிம்சையை குறிக்கிறது. ஆனால் பாஜகவில் உள்ள இந்துக்கள் வன்முறையாளர்கள்'' கொந்தளித்தார்.
அப்போது உடனே எழுந்த பிரதமர் மோடி, ''இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார். அதற்கு ராகுல் காந்தி, ''இந்து மதம் மோடிக்கு மட்டும் சொந்தம் கிடையாது. பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு மட்டும் சொந்தம் கிடையாது'' என பதிலடி கொடுத்தார்.
நேற்று ராகுல் காந்தி பேசியபோது பிரதமர் மோடி உள்பட பாஜகவினர் 8க்கும் மேற்பட்ட முறை குறுக்கீடு செய்தனர். ராகுலின் இந்து மதம் குறித்து பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் ராகுல் தனது அதிரடியை தொடர்ந்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் எதிர்கட்சிகளின் பேச்சில் குறுக்கீடு செய்து பிரதமர் மோடி எழுந்து நின்று பேசியது இதுவே முதன்முறையாகும். கடந்த 10 ஆண்டுகளாக பாலா படம்போல் அமைதியாக இருந்த நாடாளுமன்றம், இப்போது ராகுல் காந்தியால் ஹரி படம்போல் களைகட்டியுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசுகிறார். ராகுல் காந்தியின் பேச்சுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் பிரதமர் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாடாளுமன்றத்தில் இன்றும் பெரிய சம்பவம் காத்திருக்கிறது.
What's Your Reaction?