வான் சாகச நிகழ்ச்சி நிறைவு... சென்னையில் செம டிராஃபிக்... வீடு திரும்ப முடியாமல் திணறும் மக்கள்!
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்தும் வீடு திரும்ப முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.
சென்னை: இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் மெய் சிலிர்க்க வைக்கும் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விமான சாகச நிகழ்ச்சியை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். அதிகாலை முதலே சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மெரினாவில் குவியத் தொடங்கினர். மின்சார ரயில், பேருந்து, இருசக்கர வாகனம், கார் ஆகியவற்றின் மூலம் மெரினா நோக்கி பயணித்த பொதுமக்களால், காலை முதலே சென்னையின் பிரதான சாலைகள் உற்சாகமாக காணப்பட்டன.
இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசில் ஏற்பட்டது. முக்கியமாக அண்ணா சாலை, கடற்கரை நோக்கிச் செல்லும் முக்கியமான சாலைகளில் வாகனங்கள் நகர முடியாத அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல், தாம்பரம், வேளச்சேரி ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறியதால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.
இந்நிலையில் தற்போது விமான சாகசம் முடிந்து பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். சொந்த வாகனங்களில் மெரினா கடற்கரை சென்றவர்கள், அங்கிருந்து திரும்ப முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அண்ணா சாலை உட்பட கடற்கரையில் இருந்து வெளிவரக்கூடிய அனைத்து இணைப்புச் சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் மெரினாவில் இருந்து ஒரே நேரத்தில் வெளியேற முயற்சிப்பதால், இப்படியான சூழல் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், சேப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. முக்கியமாக பீச் ஸ்டேஷனில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் ரயில்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. மேலும், மெட்ரோ ரயில்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்களின் வசதிக்காக 3.5 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி போக்குவரத்து நெரிசல் சீராக இன்னும் ஓரிரு மணி நேரங்கள் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போலீஸார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், குழந்தைகளும் பொதுமக்களும் சூரிய கிரன் விமான சாகசப் படையின் வீரர்களுடனும், மற்ற வீரர்களுடனும் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
What's Your Reaction?