பிரம்மாண்டமாக நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி... சென்னைக்கு வந்த விமானங்கள் ரத்து... பயணிகள் அவதி!
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிலையில், வான் சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னைக்கு வந்த 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை: இந்திய விமானப்படையின் 92வது ஆண்டை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சி, மதியம் ஒரு மணிக்கு நிறைவுப்பெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர். வான் சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டனர். இதனால் மெரினா கடற்கரைக்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது.
இந்நிலையில், வான் சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னை விமான நிலையம் வந்த 3 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அதன்படி, கோலாலம்பூர், சிங்கப்பூர், டெல்லி ஆகிய இடங்களில் இருந்து சென்னை வந்த 3 விமானங்கள், பெங்களூர், கோவை நகரங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. அதேநேரம், கொல்கத்தா, அந்தமான், கோவை, மைசூர், ஜெய்ப்பூர், மதுரை, தூத்துக்குடி நகரங்களில் இருந்து சென்னைக்கு 10 விமானங்கள் வருகை தந்தன. விசாகப்பட்டினம், அந்தமான், கொல்கத்தா, திருச்சி, அகமதாபாத், கோவா உள்ளிட்ட 9 பகுதிகளுக்கு புறப்பட்ட 19 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை விமான நிலையத்தில் அக்.1ம் தேதி முதல், வரும் 8ம் தேதி வரை விமான சேவையில் மாற்றம் இருக்கும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி விமான சேவைகள் 15 நிமிடங்களில் இருந்து, 2 மணி நேரம் வரையில் நிறுத்தப்பட்டன. அதுகுறித்து முன்னதாகவே அறிவிப்புகள் வெளியாகிவிட்டதால் பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. இந்நிலையில் மெரினாவில் நடைபெற்ற ஏர் ஷோ நிகழ்ச்சி தொடங்கியது முதல் அது முடியும் வரை, சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் பறப்பது முழுவதுமாக தடை செய்யப்பட்டது.
அதன் காரணமாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 231 பயணிகளுடன் சென்னை வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், 10.25 மணிக்கு தரையிறங்க வேண்டியது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதைபோல் சிங்கப்பூரில் இருந்து 188 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா விமானம், காலை 10.35 மணிக்கு தரையிறங்க வேண்டும். ஆனால், இந்த விமானமும் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் டெல்லியில் இருந்து பகல் 12.30 மணிக்கு, சென்னையில் தரையிறங்க வேண்டிய ஏர் இந்தியா விமானம், 167 பயணிகளுடன் கோவைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதேபோல், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, பகல் 1.20 மணிக்கு பெங்களூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், 1.25 மணிக்கு கோவை செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், பகல் 12.05 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
What's Your Reaction?