தமிழ்நாடு

மது ஒழிப்பு என்று சொன்னதால் 30 தொகுதிகளை தேர்தலில் இழந்தோம்: அமைச்சர் ரகுபதி

2016ஆம் ஆண்டு தேர்தலில் பூரண மதுஒழிப்பு குறித்து கூறியதால் தான், 20 முதல் 30 தொகுதிகள் வரை தோல்வியடைய நேர்ந்தது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

மது ஒழிப்பு என்று சொன்னதால் 30 தொகுதிகளை தேர்தலில் இழந்தோம்: அமைச்சர் ரகுபதி
பூரண மதுஒழிப்பு குறித்து கூறியதால் தான், 20 முதல் 30 தொகுதிகள் வரை தோல்வியடைய நேர்ந்தது - ரகுபதி

புதுக்கோட்டை மாநகராட்சியில் உள்ள அகரப்பட்டி மற்றும் பெருமாள்பட்டி ஆகிய இடங்களில் அங்கன்வாடி மைய கட்டிடங்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “அகில இந்திய அளவில் மதுவிலக்கு கொண்டு வந்தால் தான் சாத்தியமே என்று தான் கூறினோமே தவிர, பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் திமுகவின் லட்சியம். மதுவிலக்கு மத்திய அரசுதான் அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோமே தவிர நாங்கள் மதுவிலக்கு அமல்படுத்த மாட்டோம் என்று கூறவில்லை.

2016ஆம் ஆண்டு பூரண மதுவிலக்கு என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. அன்றைய தேர்தலில் இந்த கருத்து கூறியதாலேயே இருபதில் இருந்து 30 தொகுதிகள் திமுக இழக்க கூடிய சூழ்நிலை உருவாக்கியது என்ற கருத்து நிலவுகிறது.

திருப்பூர், ஈரோடு, கோவை இடங்களில் உள்ள தொழிலாளர்கள் அப்போது திமுகவுக்கு எதிராக மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்று கூறியதால் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் படிப்படியாக மதுக்கடையில் குறைப்போம் என்று கூறினோம். அதன்படி 500 கடைகளை மூடியுள்ளோம். பூரண மதுவிலக்கு உடனடியாக கொண்டு வருவோம் என்று நாங்கள் கூறவில்லை. பூரண மதுவிலக்கு என்பது எங்களது லட்சியம். படிப்படியாக குறைப்பது என்பது எங்களுடைய நிச்சயம்.

எஃப்.எல்.டு பார் என்பது தனியார்கள் அதற்கென தனியாக மனு அளித்து அனுமதி பெற்று நடத்தி வருகின்றனர். அது ஒரு சொகுசு பாராகும். டாஸ்மாக் பார்க்கும் அதுக்கும் வித்தியாசம் உள்ளது. தனியார் மதுக்கடைகளில் அவர்களே மதுபாட்டில்களை கொள்முதல் செய்வார்கள். அவர்களே விற்பார்கள். தனியார் விடுதியில் கூட அனுமதி பெற்று நடத்தலாம்.

அரசியல் கட்சி தொடங்கும் அனைவருமே கூறும் கருத்துக்களை தான் நடிகர் விஜய்யும் கூறுகிறார். எங்களை பொறுத்தவரை, நாங்கள் எங்கள் பாதையில் மிகத் தெளிவாக உள்ளோம். பயணத்தில் தெளிவாக உள்ளோம். இலக்கில் தெளிவாக உள்ளோம். 2026 எங்களுடைய இலக்கு 200 சீட். 234 இலட்சியம் 200 நிச்சயம்.

எங்களிடம் நேரடியாக யாரும் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. அனைத்து கூட்டணி கட்சிகளும் தலைவர்களும் அன்போடும் பாசத்தோடும் உள்ளனர். தோழமை கட்சிகளாக உள்ளார்கள்.

அன்புமணி ராமதாஸ் மதுக்கடைகளை குறையுங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள் என்று கூறிய கருத்திற்கு பதில் அளித்த அவர் அன்புமணி ஆட்சியில் இருந்தால் அவருக்கு தெரியும் ராஜினாமா செய்வது குறித்து.

பூரண மதுவிலக்கு என்பது இந்தியாவின் முழுவதுமாக கொண்டு வந்தால் மட்டுமே சாத்தியம். இருப்பினும் தமிழக முதல்வர் தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வரக்கூடிய நடவடிக்கையை முதல்வர் நிச்சயம் எடுப்பார், மது கொள்கையை பொருத்த மட்டும் என்றைக்குமே நாங்கள் ஒரே கருத்து தான்.

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்களும் தான் கேட்கிறோம் தேர்தல் அறிக்கையிலே நாங்கள் கூறியுள்ளோம். தமிழக அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது மத்திய அரசு தான் நடத்த முடியும். சென்சஸ் என்பது மத்திய அரசு பட்டியலில் உள்ளது” என்றார்.