பட்ஜெட் கூட்டத்தொடர் 2025: மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்- மோடி வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும், இந்தியாவின் வளர்சிக்கு அனைத்து எம்.பி.க்களும் பங்களிப்பார்கள் என நம்புவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Jan 31, 2025 - 12:46
 0
பட்ஜெட் கூட்டத்தொடர் 2025: மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்- மோடி வலியுறுத்தல்
நரேந்திர மோடி

2025-26 நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் டெல்லியில் இன்று தொடங்கியது. நடப்பாண்டின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் தொடங்கியது. 

குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் நாடாளுமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அரசு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டார். நாடாளுமன்றத்தை வந்தடைந்ததும் குடியரசு தலைவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

செங்கோல் முன்னதாக கொண்டு செல்லப்பட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். திரெளபதி முர்முவை, குடியரசு துணைத் தலைவர், மக்களவை சபாநாயகர், பிரதமர் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது.

டெல்லியில்  நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, பட்ஜெட் தாக்கலுக்கு முன் அன்னை லட்சுமியை வழிபட்டுவிட்டு வருகிறேன். ஏழை எளிய மக்களை அன்னை லட்சுமி ஆசிர்வதிக்க பிரார்த்தனை செய்தேன். இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன். அனைவருக்குமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என தெரிவித்தார்.

மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏராளமான மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து, மக்களின் மேம்பாட்டிற்காக நாள்தோறும் பணியாற்றி வருவதாகவும், நாளை தாக்கலாகும் பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சியை மேலும் உறுதி செய்யும் என நம்புவதாகவும் கூறினார்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும், இந்தியாவின் வளர்சிக்கு அனைத்து எம்.பி.க்களும் பங்களிப்பார்கள் என நம்புவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow