தொடரும் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் அட்டூழியம்.. அச்சத்தில் மக்கள்

மூன்று மாத கடன் நிலுவை தொகை செலுத்தாததால் இடத்திற்கு கடன் கொடுத்த நிறுவனமும், வீடு கட்ட கடன் கொடுத்த நிறுவனமும் வீட்டின் மீது பெயின்டால் இந்த இடம் அடமானத்தில் உள்ளது என்று எழுதிய சம்பவம், கடன் வாங்கியவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதோடு, அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nov 22, 2024 - 06:47
Nov 22, 2024 - 06:50
 0
தொடரும் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் அட்டூழியம்.. அச்சத்தில் மக்கள்
தொடரும் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் அட்டூழியம்.. அச்சத்தில் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே வாத்தனாக்கோட்டை கிராமத்தில் பாலகிருஷ்ணன் -மூக்காயி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் சக்திவேல், முத்துக்குமார் ஆகியோர் விவசாய வேலை மற்றும் ஆடு மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் நிதிநிறுவனத்திடமிருந்து  சக்திவேல்   7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், முத்துக்குமார் பத்து லட்சம் ரூபாயும் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தாய் மூக்காயி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் மூன்று மாதமாக இருவரும் நிலுவைத் தொகையை கட்டவில்லை என்றும் கூடுதலாக கால அவகாசம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தனியார் நிதி நிறுவன பணியாளர்கள் வீட்டின் உள் பகுதியில்  குறிப்பிட்ட நிதிநிறுவனத்தின் பெயரை பெயிண்டால் எழுதி இந்த இடம் அடமானத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். இதேபோன்று மற்றொரு நிதிநிறுவனத்தின் பெயரை வெளிப்பகுதியில் எழுதி இந்த இடம் அடமானத்தில் உள்ளது எனவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் எழுதியுள்ளனர்.

மேலும், மூன்று மாத நிலுவைத் தொகையான 45 ஆயிரத்து 24 ரூபாய் செலுத்தப்படவில்லை எனவும் எழுதப்பட்டதால் குடும்பத்தார் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதுடன் என்ன செய்வது என்பது அறியாமல் திகைத்து வருகின்றனர். இதுபோன்று  அத்துமீறும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோன்று சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மூன்று மாத நிலுவைத் தொகையை செலுத்தாததால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடன் பெற்றவர் வீட்டின் சுவற்றின் மீது இந்த இடம் கடனில் உள்ளது என எழுதி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதற்கு தமிழ்நாடு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow