Fake Liquor : ராணுவ சரக்கா? மதுபிரியர்களே உஷார்!
Fake Liquor Bottles Sales in Kanyakumari : ராணுவ ஸ்டிக்கர் ஒட்டிய போலி மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பெங்களூருவில் நடந்த சோதனையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிக்கியிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி..
Fake Liquor Bottles Sales in Kanyakumari : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வந்த ஒரு கெமிக்கல் கம்பெனியை குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அது போலி கெமிக்கல் கம்பெனி என்பதையும், அங்கிருந்து சட்ட விரோதமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தனியார் பார்சல் சர்வீஸ்கள் மூலம் போலி கம்பெனி பெயர்களில் பதிவு செய்து, அதில், பேரல்களில் ராணுவ ஸ்டிக்கர் ஒட்டிய போலி மதுபாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டதையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த கம்பெனிக்கு சீல் வைத்த உளவுப்பிரிவு போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலரும் கைது செய்யப்பட்டு வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, குமரி மாவட்டம் தக்கலை மற்றும் இரணியல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலெட்சுமி தலைமையில் போலீசார் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து, கடந்த 6-ம் தேதி மார்த்தாண்டம் தனியார் கூரியர் அலுவலகத்துக்கு 6 கெமிக்கல் பேரல் வந்தது தெரியவந்தது.
உடனே அங்கு சென்ற மது விலக்கு போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், திருத்துவபுரம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் செல்வராஜ், அந்த பேரல்களை காரில் எடுத்துச் சென்றது தெரியவரவே, அவரது வீட்டை போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது, கூரியரில் கெமிக்கல்கள் வந்ததாக கூறப்பட்ட ஆறு பேரல்களும் வீட்டில் இருந்தது. அதே போல் ராணுவ ஸ்டிக்கர் ஒட்டிய 11 போலி மது பாட்டில்கள் இருந்ததையும் கைப்பற்றிய போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசுக் காரையும் பறிமுதல் செய்தனர்.
காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து செல்வராஜிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், போலியாக ராணுவ ஸ்டிக்கர் ஒட்டிய மது பாட்டில்களை பேரல்களில் கொண்டு வந்து, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதன் பேரில், செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து கோர்ட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த கடத்தலில் தொடர்புடைய அஜித் மற்றும் நெல்லையை சேர்ந்த ராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன், விருதுநகர் அருகே உள்ள பெரிய வள்ளிக்குளத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவர் வீரர் வீரராஜும், பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட போலி ராணுவ ஸ்டிக்கர் ஒட்டிய மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






