தருமிக்கு பொற்கிழி அளித்த சொக்கநாதர்.. மதுரையில் மாறும் ஆட்சி.. நாளை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்

தருமிக்கு பொற்கிழி அளித்த திருவிளையாடல் படலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்றது. திருவிளையாடல் புராணத்தில் ஆலவாய்க் காண்டத்தில் ஐம்பத்து இரண்டாவது படலமாக தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் அமைந்துள்ளது.

Sep 10, 2024 - 07:31
Sep 10, 2024 - 15:41
 0
தருமிக்கு பொற்கிழி அளித்த சொக்கநாதர்.. மதுரையில் மாறும் ஆட்சி.. நாளை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
aavani moola festival madurai meenakshi amman temple

இறைவனே ஆனாலும் குற்றம் குற்றமே என்று புலவர் நக்கீரர் சொன்ன தலம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மூலம் திருவிழா அற்புதமாக நடைபெற்று வருகிறது. தினம் ஒரு திருவிளையாடல் என நடக்கும் இந்த விழாவின் முக்கிய அம்சமாக தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் நடைபெற்றது. நாளை செப்டம்பர் 11ஆம் தேதி சிவபெருமானுக்கு மதுரையில் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவிற்கு அடுத்தபடியாக சிறப்பாக நடைபெறும் திருவிழா ஆவணி மூலம் திருவிழாவாகும்.மதுரையில் சிவபெருமான் ஆடிய திருவிளையாடல்களை விளக்கும் வகையில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு வாய்ந்த லீலைகள் உள்ளன. அதில் முக்கியமானது தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை. இறைவனே ஆனாலும் குற்றம் குற்றமே என்று உண்மையை உரத்த சொன்ன நக்கீரரின் பெருமையை உலகறியச் செய்தவர் சிவபெருமான். அது என்ன திருவிளையாடல் என்று பார்க்கலாம்.

பாண்டிய மன்னனின் சந்தேகம்:

பாண்டியநாட்டை ஆட்சி செய்த மன்னன் நந்தவனம் அமைத்து இறைவழிபாட்டிற்காக அதில் மலரும் பூக்களைப் பயன்படுத்தினான். அந்த நந்தவனத்தில் வண்டுகள் மொய்க்காத செண்பக மலர்களும் இருந்தன. வங்கிசூடாமணிப் பாண்டியன் செண்பக மலர்களை சொக்கநாருக்கு அணிவித்து வழிபாடு நடந்தினான். ஆதலால் சொக்கநாதர் செண்பக சுந்தரேசர் என்ற பெயரினையும் பெற்றார். வங்கிசேகர பாண்டியனும் செண்பகப் பாண்டியன் என்று  அழைக்கப்பட்டான்.

பாண்டிய மன்னன் தன் மனைவியுடன் நந்தவனத்தில் பேசிக்கொண்டிருந்தான். அப்போது நறுமணம் வீசியது. காற்றில் இந்த மணம் வருதே எப்படி என்று யோசித்தான். மனைவியின் கூந்தலில் இருந்து வருமோ? என்று நினைத்தான். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இருக்குமோ? அல்லது கூந்தலில் சூடிக்கொள்ளும் பூக்களினால் நறுமணம் வருமோ என்று சந்தேகப்பட்டு அரசியிடமே கேட்டான். 

சந்தேகம் தீர்த்தால் பரிசு 

அதற்கு அரசியோ எனக்கெப்படி தெரியும் நீங்க உங்க சங்க புலவர்களிடம் சந்தேகத்தை தீர்த்துக்கங்க என்று சொல்லி விட்டார். உடனே பாண்டிய மன்னன், உடனே அறிவிப்பு வெளியிடச்சொன்னான். ஆயிரம் பொற்காசுகளை கட்டி தொங்க விட்ட மன்னன் தன்னுடைய சந்தேகத்தை தீர்ப்பவர்களுக்கு இந்த  பொற்கிழி பரிசளிக்கப்படும் என்று அறிவித்தான். பாண்டியன் அவையில் இருந்த புலவர்களால் சந்தேகத்தை தீர்க்க முடியவில்லை. அந்த அறிவிப்பை கேட்டு தருமிக்கு ஆசை வந்தது. சிவன் மேல் அன்பு கொண்ட அந்த தருமியோ, எப்படியாவது தனக்கு அந்த பரிசு கிடைக்க அருள்புரிய வேண்டும் என்று வேண்டினான். 

புலவராக வந்த சிவபெருமான்:

உடனே சொக்கநாதரே ஒரு புலவர் வடிவத்தில் வந்து பாடல் எழுதிக்கொடுத்தார். அதை எடுத்துக்கொண்ட தருமி நேரே பாண்டிய மன்னன் அவைக்குச் சென்று பாடலை பாடிக்காட்டினான். 

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமஞ்செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் மயிலியிற்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே... என்று தருமி இறைவன் அளித்த பாடலை வாசித்தான்.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று தருமி சொல்லவே, மகிழ்ச்சியடைந்த மன்னன் ஆயிரம் பொற்காசுகளை பரிசாக கொடுக்கப் போனார், அதற்கு நக்கீரர் விடவில்லை. இந்த பாடலில் பொருள் குற்றம் உள்ளது என்று கூறினார் நக்கீரர். உடனே தருமி அழுது கொண்டே சொக்கநாதர் முன்பு போய் நின்றார். பாட்டில் பிழை இருப்பதாக கூறி திருப்பி அனுப்பிவிட்டனர் என்றார் தருமி. 

நக்கீரருடன் வாதிட்ட இறைவன்

தருமி சொன்னதைக் கேட்டு கோபத்தோடு சங்க மண்டபத்திற்கு போன இறைவன், என் பாட்டில் குற்றம் கண்டது யார் என்று கேட்டார். அதற்கு நக்கீரர் உங்க பாட்டில் பொருள் குற்றம் உள்ளது என்று சொல்ல இருவருக்கும் சண்டை வலுத்தது. பெண்களுக்கு இயற்கையிலேயே மணம் கிடையாது என்று அடித்துக்கூறினார் நக்கீரர். கற்புக்கரசிகள், தேவலோகத்துப் பெண்கள் ஆகியோரின் கூந்தலுக்குக்கூட இயற்கையில் மணம் இல்லையா என்று இறைவன் கேட்க, அதற்கு அதற்கு நக்கீரர் “நான் தினந்தோறும் வணங்கும் திருகாளத்தியப்பரின் இடப்பாகத்தில் இடம்பெற்ற ஞானப்பூங்கோதையாகிய உமையம்மையின் கூந்தலுக்கும் இயற்கையில் மணம் கிடையாது என்று உறுதியாக சொன்னார்.

நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே..

உடனே கோபத்தோடு நெற்றிக்கண் திறந்தார் இறைவன். வந்திருப்பது சிவன்தான் என்பதை உணர்ந்த நக்கீரர், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே, உடம்பு முழுக்க கண்களைக் கொண்டு சுட்டாலும் குற்றம்தான் என்று வாதிட்டார். உடனே தனது நெற்றிக்கண்ணால் நக்கீரரை சுட்டு எரித்தார். நக்கீரர் பொற்றாமரைக்குளத்திற்குள் சென்றார். இறைவன் நக்கீரருக்கு அருள் தந்து விட்டு அந்த இடத்தை விட்டு மறைந்தார். யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும் நடுநிலை தவறாமல் உண்மையை உறக்கச் சொல்ல வேண்டும் என்று சங்க காலத்திலேயே நக்கீரர் மூலம் உணர்த்தியுள்ளார் இறைவன். இதனை ஆண்டு தோறும் ஆவணி மூலத்திருவிழாவில் நான்காம் நாள் திருவிளையாடலாக நடத்துகின்றனர். இந்த திருவிளையாடல் ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பர் 8) நடைபெற்றது. 

மதுரையில் சிவபெருமான் ஆட்சி 

நேற்று செப்டம்பர் 9ஆம் தேதி உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடலும், இன்றைய தினம் (செப்டம்பர் 10) பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடலும் நடக்கிறது. நாளைய தினம் ( செப்டம்பர் 11) சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. இனி தொடர்ச்சியாக நரிகளை பரிகளாக்கிய லீலை, பிட்டுக்கு மண் சுமந்த லீலை என தினமும் ஒரு திருவிளையாடல் நடக்கப் போகிறது. வரும் 13ஆம் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை புட்டுத்தோப்பு மண்டபத்தில் நடைபெற உள்ளது.  அன்றைய தினம் முழுவதும் கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.  சித்திரையில் தொடங்கிய மீனாட்சி ஆட்சி ஆவணியில் முடியும். நாளை செப்டம்பர் 11 தொடங்கி சித்திரை வரை இனி மதுரையில் சொக்கநாதர் ஆட்சிதான் நடைபெறும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow