நாக தோஷம் நீக்கும் நாக சதுர்த்தி விரதம்.. புற்றுக்கு பால் ஊற்றினால் புத்திரபாக்கியம் கிடைக்கும்

ஆடி மாதம் வளர் பிறைச் சதுர்த்தியில் மகளிர் விரதமிருந்து நாக தெய்வத்தை வழிபடுவது நாக சதுர்த்தி விரதமாகும். ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாக பஞ்சமி விரதம் தொடங்குகிறது இந்த ஆண்டு "நாக சதுர்த்தி' ஆடி 23ஆம் தேதி ஆகஸ்ட் 8ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாக பஞ்சமி விரதம் ஆகஸ்ட் 9ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

Aug 8, 2024 - 06:00
 0
நாக தோஷம் நீக்கும் நாக சதுர்த்தி விரதம்.. புற்றுக்கு பால் ஊற்றினால் புத்திரபாக்கியம் கிடைக்கும்
Naga chathurthi viratham

ஆடி மாதம் என்றால் அம்மன் கோவில்களில் வழிபாடு அமர்க்களமாக இருக்கும். இந்த மாதம் முழுவதும் நாகதேவி பூஜை என்று சொல்லப்படும் சர்ப்ப வழிபாடு எல்லா இடங்களிலும் அமோகமாக நடைபெறும். இந்த வழிபாட்டு முறை, காலம் காலமாக நடந்து வருகிறது.

ஆதிசேஷன் என்ற நாகத்தின் மடியில்தான் விஷ்ணு பள்ளி கொண்டுள்ளார். முருகப்பெருமானின் காலடியில் படம் எடுத்த நிலையில் நாகம் உள்ளது. நாக வழிபாடு என்பது வேத காலத்தில் இருந்தே இருக்கிறது. மனிதரின் ஜாதக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது நவகிரகங்கள். இதில் ராகு, கேது கிரகங்கள் நாக வடிவுடையவை.

ஆடி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக அணிந்து கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி, கங்குபாலன், கார்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களை நினைத்து புற்றுக்குப் பால் ஊற்றி வணங்குவது நல்லது.

பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். அவர்களில், கத்ரி என்பவளிடத்தில் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து இறக்கும்படி தாய் கத்ரி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து இறந்தன. அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக பஞ்சமி தினம்.

இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். விரதம் கடைப்பிடிக்கும்போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்திற்குள் வைத்து வணங்க வேண்டும். 

நாக பஞ்சமி நாளில் சிறிய வெள்ளி அல்லது செம்பில் செய்த நாகருக்கு வீட்டிலேயே பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, பூக்களால் அர்ச்சனை செய்து, பால் பாயசம் நைவேத்தியம் செய்வது வழக்கம். இந்த பூஜையினால் தங்கள் குழந்தைகளுக்கும், கணவருக்கும், சகோதரர்களுக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை.

முற்பிறவியில் செய்த பாவங்களால் இந்த பிறவியில் பல துன்பங்களை அனுபவித்து வருகிறோம். புண்ணியம் செய்திருந்தால் இந்த பிறவியில் நல்ல பலன்களை அடைந்து வருகிறோம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதில் நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயால் அவதிப்படுவதும் குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவர். இந்த துன்பங்களிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம்.

நாகசதுர்த்தி அல்லது நாக பஞ்சமி நாளில் நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி, நாகசதுர்த்தி அன்றோ அல்லது வெள்ளிகிழமை அன்றோ உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகர் சிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுங்கள்.

இந்த நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களைக் கடைப்பிடிப்பதால், குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும், மகிழ்ச்சியும் ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  மகப்பேறு உண்டாகாமல் இருப்பதற்கு முன் வினையே காரணம் என்று கருடபுராணம் தெரிவிக்கிறது. பரிகாரமாக ஏழைக் குழந்தைகளுக்கு உடைகள், விளையாட்டு பொருட்கள், நூல்கள் வாங்கி கொடுத்தால் புத்திரபாக்கியம் உண்டாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow