மயிலை கற்பகாம்பாள்.. மாங்காடு காமாட்சி.. அம்மன் கோயில்களுக்கு இலவச ஆன்மீக பயணம்.. உடனே புக் பண்ணுங்க

ஆடி மாத ஆன்மிகப் பயணம் நான்கு கட்டங்களாக, அதாவது ஜூலை 19, ஜூலை 26, ஆகஸ்ட் 2 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் தொடங்கப்பட உள்ளன.ஆடி மாத அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Jul 2, 2024 - 10:25
Jul 2, 2024 - 11:21
 0
மயிலை கற்பகாம்பாள்.. மாங்காடு காமாட்சி.. அம்மன் கோயில்களுக்கு இலவச ஆன்மீக பயணம்.. உடனே புக் பண்ணுங்க
Minister Sekar Babu Announce Free Tour For Aadi Month 2024

ஆடி மாதம் பிறந்தாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களை கட்டும். பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களை தரிசனம் செய்ய விரும்பும் மக்களுக்காக  தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த மூன்று ஆண்டுகாலமாக ஆன்மீக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆடி மாதம் இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது. இதனையொட்டி ஆன்மீக சுற்றுலா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


“2024-2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், “ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் கோயில்களுக்கும் வயது மூப்பின் காரணமாகவும், பொருளாதார வசதியின்மை காரணமாகவும், கோயிலுக்கு செல்ல இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட, தலா 1,000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.


இது தொடர்பாக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் வெளியிடபட்டுள்ள அறிக்கையில் : “சென்னை,  தஞ்சாவூர்,  கோயம்புத்தூர்,  திருச்சி,  மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆடி மாதத்தில் 1,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

சென்னை மண்டலத்தில் மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயில்,  பாரிமுனை  காளிகாம்பாள் கோயில்,  திருவொற்றியூர்  வடிவுடையம்மன் கோயில்,  மாங்காடு  காமாட்சியம்மன் கோயில், திருவேற்காடு  தேவி கருமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,  தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர் பெரியகோயில்,   வராகியம்மன் கோயில், தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில், புன்னைநல்லூர் மகா மாரியம்மன் கோயில்,  திருக்கருகாவூர்  கர்ப்பக ரட்சாம்பிகைகோயில், பட்டீஸ்வரம்  துர்கையம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், கோயம்புத்தூர் மண்டலத்தில் கோயமுத்தூர் கோனியம்மன் கோயில், பொள்ளாச்சி  மாரியம்மன், அங்காளம்மன் கோயில், ஆனைமலை  மாசாணியம்மன்கோயில்,  சூலக்கல் மாரியம்மன் கோயில், கோயமுத்தூர்  தண்டுமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும், மதுரை மண்டலத்தில் மதுரை – மீனாட்சியம்மன் கோயில், வண்டியூர் –  மாரியம்மன் கோயில், மடப்புரம் – காளியம்மன் கோயில், அழகர்கோவில் – ராக்காயியம்மன் கோயில், சோழவந்தான் – ஜனகை மாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,

திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி – பகவதியம்மன் கோயில், முப்பந்தல் –  இசக்கியம்மன் கோயில், சுசீந்திரம் – ஒன்னுவிட்ட நங்கையம்மன் கோயில், மண்டைக்காடு –  பகவதியம்மன் கோயில், குழித்துறை – சாமுண்டியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு பயணத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆடி மாத அம்மன் கோயில்களுக்கான ஆன்மிகப் பயணம் நான்கு கட்டங்களாக, அதாவது 19.07.2024. 26.07.2024, 02.08.2024, 09.08.2024 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் தொடங்கப்பட உள்ளன.இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்தகுடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளமான http://www.hrce.tn.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றோ விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து 17.07.2024-க்குள் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்திட வேண்டும். மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4253 1111, சென்னை மண்டலத்திற்கு 99417 20754, 044-29520937, தஞ்சாவூர் மண்டலத்திற்கு 0436-2238114. கோயம்புத்தூர் மண்டலத்திற்கு 0422- 2244335, திருச்சி மண்டலத்திற்கு 0431-2232334, மதுரை மண்டலத்திற்கு 0452-2346445, திருநெல்வேலி மண்டலத்திற்கு 0462-2572783 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow