வேண்டிய வரம் தரும் கணபதி.. விநாயகர் சதுர்த்தி நாளில் பூஜை செய்ய நல்ல நேரம்

விநாயகர் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து பூஜை செய்து வழிபடலாம். கணபதியை வழிபட சனிக்கிழமையான (செப்டம்பர் 7) நல்ல நேரம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி பூஜை செய்வதற்கு மட்டுமல்ல, விநாயகரை வாங்கி வருவதற்கும் நல்ல நேரம் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அப்படி விநாயகரை எந்த நாளில், எந்த நேரத்தில் வாங்கி வந்து வழிபட வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

Sep 5, 2024 - 13:08
Sep 5, 2024 - 17:36
 0
வேண்டிய வரம் தரும் கணபதி.. விநாயகர் சதுர்த்தி நாளில் பூஜை செய்ய நல்ல நேரம்
ganesh Chaturthi 2024

விநாயகர் என்றாலே வேண்டிய வரங்களை உடனே கொடுப்பவர். பெரும்பாலானவர்களுக்கு இஷ்ட தெய்வமாக இருப்பவர் 'விக்னங்களை தீர்க்கும் விநாயகர்', என்று கூட சொல்லலாம். வெறும் கைகளோடு, இரு கை கூப்பி வணங்கி மூன்று தோப்புக்கரணம் போட்டு, தலையில் கொட்டு வைத்துக் கொண்டு, நம்பிக்கையோடு வேண்டினாலே கேட்ட வரங்களை வாரி வழங்குபவர் விநாயகர். தும்பிக்கையான் விநாயகருக்கு விரதம் இருந்து வேண்டினால் நம் வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றுவார்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்கள் காலை 9 மணிக்குள் விநாயகரை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்து விட வேண்டும்.விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, காலையிலேயே எழுந்து, பூஜை அறையை அலங்காரம் செய்து, தீபமேற்றி விநாயகருக்கு மிகவும் பிடித்த வெள்ளெருக்கு மாலை, அருகம்புல் மாலை அணிவித்து, மனதார உங்களது விரதத்தை தொடங்கலாம். முடிந்தவர்கள், எதுவுமே சாப்பிடாமல், சதுர்த்தி தினத்தன்று மாலை 6 மணி வரை, விரதம் இருக்கலாம். முடியாதவர்கள், வெறும் பால் பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள் மூன்று வேளையும் வயிறார உணவு சாப்பிட்டும் விநாயகர் வழிபாட்டை செய்யலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. 

விநாயகரை வணங்கும் போது தலையில் குட்டிக்கொண்டும் தோப்புக்கரணம் போட்டும் வழிபடுவது வழக்கம். கஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்கள் தன்னைக் கண்டால் தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்ப்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர்.

விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். கோபமடைந்த விநாயகர் தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். இதுமுதல் தோப்புக்கரணம் போடும் வழக்கம் வந்தது.

விநாயகர் சதுர்த்தி நாளில் விரதம் இருப்பவர்கள்  கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, பழங்கள், வசதிக்கு ஏற்ப இனிப்புகள் என பட்சணங்களை படையலிடுவார்கள். இதுவே பிள்ளையாரை சின்ன பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்துப்போக காரணமாகிறது. உங்களுக்கு நிறைவேறாத வேண்டுதல் ஏதாவது மனதில் இருந்தால், அதை விநாயகரிடம் சொல்லுங்கள்!அப்படி சொல்லும்போது, ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் விநாயகரின் பாதங்களில் வைத்து விடுங்கள். நீங்கள் வைக்கக்கூடிய அந்த வேண்டுதல் அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள், நிறைவேற வேண்டுமென்றும் வேண்டுதல் வையுங்கள். 

விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டைகளை 11, 21, 51, 101 இப்படி ஒற்றைப்படையில் தயாரித்து விநாயகருக்கு முன்பு நைவேத்தியமாக படைக்க வேண்டும். கொழுக்கட்டைகளை பிடிக்கும் போதே உங்களது வேண்டுதலை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.பூஜை முடிந்தவுடன் அந்த உருண்டைகளை, உங்கள் வீட்டில் அக்கம்பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விட வேண்டும். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இப்படிப்பட்ட தோஷ நிவர்த்திக்கு கூட சதுர்த்தி விரதம் நல்ல பலனை கொடுக்கும். 

விநாயகர் சிலையை கரைப்பது ஏன் என்பது பற்றி சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை சிலை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் அர்த்தமாகும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow