குடிப்பதற்கு பணம் கேட்டு தொல்லை.. இளைஞரை கொலை செய்த நண்பர்கள்
குடிப்பதற்கு பணம் கேட்டு தொல்லை செய்த நபரை நண்பர்கள் இருவர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் மங்களபுரம் சந்திர யோகி சமாதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணம் ஆகவில்லை. வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். மணிகண்டனின் நண்பர்களான ஓட்டேரி கிருஷ்ணதாஸ் சாலையைச் சேர்ந்த ஜெய்சங்கர் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். மற்றொரு நண்பரான ஓட்டேரி பழைய வாழைமா நகர் பகுதியை சேர்ந்த ஐசக் ஜெபக்குமார், ராயப்பேட்டையில் உள்ள தனியார் மாலில் வேலை செய்து வருகிறார்.
மணிகண்டன், ஜெய்சங்கர், ஐசக் ஜெபக்குமார் ஆகிய மூன்று பேரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவது வழக்கம். கடந்த சில நாட்களாக மணிகண்டன், ஜெய்சங்கரிடம் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன், ஜெய்சங்கரிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் இல்லை என கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பிறகு மணிகண்டன் குடிபோதையில் சந்திர யோகி சமாதி தெரு வழியாக சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக சென்ற ஜெய்சங்கரின் தந்தை ஆறுமுகத்திடம் உன் மகன் பணம் கேட்டால் தரமாடேன் என்று கூறுகிறான். அவனை கொலை செய்து விடுவேன் என மணிகண்டன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆறுமுகம் வீட்டிற்கு சென்று தனது மகன் ஜெய்சங்கரை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஜெய்சங்கர் தனது நண்பர் ஐசக் ஜெபக்குமாருடன் சேர்ந்து மணிகண்டனை இரும்பு ராடால் தலையில் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று காலை ஜெய்சங்கர் மற்றும் ஐசக் ஜெபக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?