47 சவரன் கொள்ளை சம்பவம் - தப்பியோடிய கொள்ளையனுக்கு கை, காலில் மாவு கட்டு

கறம்பக்குடியில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 47 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தப்பியோடிய கொள்ளையன் ராஜசேகருக்கு இடது கால் மற்றும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

Nov 30, 2024 - 00:56
Nov 30, 2024 - 01:00
 0
47 சவரன் கொள்ளை சம்பவம் - தப்பியோடிய கொள்ளையனுக்கு கை, காலில் மாவு கட்டு
47 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தப்பியோடிய கொள்ளையனுக்கு எலும்பு முறிவு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன் தலைமையிலான போலீசார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச்சென்ற இருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்த நிலையில், இருசக்கர வாகனத்தில் கொள்ளை சம்பவங்களுக்கு பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களை வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, இருவரிடமும் கறம்பக்குடி காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதில் கறம்பக்குடி அருகே பச்சநாயகுளம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரது வீட்டில், தாயார் பாக்கியலட்சுமி, மனைவி தங்களலட்சுமி இருவரையும் கட்டிப்போட்டு கடந்த நவம்பர் 9ஆம் தேதி 47 சவரன் தங்க நகைகள் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் முகமூடி அணிந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டது இவர்கள்தான் என்பது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் திண்டுக்கல் பகவதி அம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த குமார் என்பவரது மகன் முதல் குற்றவாளியான ராஜசேகர் (31), மதுரை மாவட்டம் பொன்மேனி மெயின் ரோடு மேட்டு தெரு சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்த ஜெயமணி என்பவரது மகன் மகேந்திரன் (34) என்பதும் தெரியவந்ததுள்ளது.

இவர்கள் இருவரும் மீதும் பல்வேறு மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் கொள்ளையன் ராஜசேகர் தற்போது திருச்சியில் தங்கி உள்ளதாகவும் அந்த வீட்டில் நகைகளை பதுக்கி வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்த நிலையில் போலீசார் அவரை அழைத்துக் கொண்டு திருச்சியில் உள்ள வீட்டில் இருந்த நகைகளை கைப்பற்றியுள்ளனர்.

அங்கிருந்து கறம்பக்குடி அருகே அக்னி ஆறு செல்லும் இடத்தில் வரும் போது ராசசேகர் சிறுநீர் கழிப்பதாக கூறி தப்பிச்செல்ல முயன்றுள்ளார். அப்போது போலீசார் துரத்தி பிடிக்க முயன்றதில் அக்னி பாலத்தில் இருந்து ராஜசேகர் தவறி விழுந்துள்ளார்.

இதில் ராஜசேகருக்கு இடது கால் மற்றும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதல் உதவி சிகிச்சைக்குப் பின்னர், ராஜசேகரை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு கால் மற்றும் கையில் கட்டு போடப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். மேலும் மற்றொரு குற்றவாளியான மகேந்திரனிடம் கறம்பக்குடி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow