ஃபைனான்ஸ் கம்பெனிக்கு அழைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. 2 வாலிபர்கள் கைது
நிதி நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றபோது, 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜா மடம் பகுதியில் சாலை ஓரத்தில் நின்று அழுது கொண்டிருந்தார். அதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, மன்னார்குடி முக்குலன்சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் முத்துப்பாண்டியன் (28) மற்றும் அவரது நண்பர் தவசீலன் (27) இருவரும் தன்னை அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து, இரு இளைஞர்களையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம்பெண்ணின் தந்தை தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்ததால், கடன் தொடர்பான விவரங்களை தங்களது நிறுவனத்திற்கு வந்து தெரிவிக்குமாறு கூறியுள்ளார். இளம்பெண்ணின் தந்தையை இவர்கள் அழைத்தபோது, தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும், தனது மகளை நிதி நிறுவன அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்பு அந்த இரு இளைஞர்களும் இந்த பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணை இரண்டு இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகா போலீஸார் தெரிவித்தனர்.
What's Your Reaction?