லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை.. 100 பேர் பலி.. அதிகரிக்கும் பதற்றம்!
Israel Attack on Lebanon : லெபானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயுதங்கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்புடைய இடங்களில் இருந்து மக்கள் வேளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Israel Attack on Lebanon : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து கட்டடங்களும் இடிந்து முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.
இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காஸாவில் இருந்து வெளியேறி உணவு, உடை, மருத்துவ வசதிகளின்றி பரிதவித்து வருகின்றனர். இந்த போரை உடனடியாக நிறுத்தும்படி ஐநா சபை இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் பல்வேறு உலக நாடுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த மறுத்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹமாஸுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவி செய்து வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தினார்கள்.
இதற்கு பதிலடியாக லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவம் இடையிலான மோதல் தீவிரம் அடைந்தது. அதாவது ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள், வாக்கி டாக்கிகளை வெடிக்க வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் ’மொசாட்’உளவு அமைப்பு நடத்திய இந்த தொழில் நுட்ப தாக்குதலால் ஹிஸ்புல்லா அமைப்பினர் நிலைகுலைந்து போயுள்ளனர். இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில், லெபானின் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மிகக் கடுமையான வான்வெளி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் தொடர் குண்டுமழை பொழிந்ததால் பெண்கள், குழந்தைகள் உள்பட 100 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக லெபானான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் ஒரு மணி நேரத்தில் லெபானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் இருக்கும் 300 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வலம் வருகின்றன.
லெபானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயுதங்கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்புடைய இடங்களில் இருந்து மக்கள் வேளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபானில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் நடத்திய இடங்களில் மருத்துவ சேவை உள்ளிட்ட அத்தியாவாசிய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. லெபான் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் இஸ்ரேலுக்கு உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
What's Your Reaction?