நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மக்களை ஏமாற்றுகிறது - விஜய் கண்டனம்
நீட் தேர்வு விவகாரத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அரசியல் செய்துவிட்டு தற்போது தங்களால் ரத்து செய்ய முடியாது என கையை விரிக்கும் தமிழக அரசு மக்களை ஏமாற்றுவதாக தவெக தலைவர் விஜய் எம்ஜிஆர் பாடலை மேற்கோள் காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட போது, தமிழகத்தில் பல எதிர்ப்பு குரல்கள் தொடர்ந்து எழுந்து வந்தன. தமிழ் வழிக்கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் வெற்றி பெறுவது பெரும் சவாலாக இருந்த நிலையில், தேர்வுக்கு பயந்தும், தேர்வு முடிவுக்கு பயந்தும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். சிலர் தங்களது உயிரை இழந்தனர். தொடர்ந்து அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பொழுது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற வலியுறுத்தி அரசுக்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்தன.
எதிர்கட்சியாக இருந்த போது நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்த திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், அமைதியாக இருந்து வருகிறது. இதனால் ஆளும் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் விஜய், நீட் தேர்வுக்கு எதிராக ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வந்த நிலையில், தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கிய பின்னரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தவெகவின் முதல் அரசியல் மாநாட்டில் நீர் தேர்வு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போதுள்ள அரசியல் சூழலில், நடிகர் விஜய் நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது.
இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது. கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் நீட் தேர்வு விவகாரம் குறித்து நடிகர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?