அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 1.8 கிமீ தொலைவிற்கு இரும்பு தடுப்பு வேலி..!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகள் வாடிவாசல் இருந்து வெளியேறிய பிறகு தப்பிச் செல்லாமல் இருக்க 1.8 கிமீ தொலைவிற்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தைத்திருநாளன்று புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அவனியாபுரம் கமிட்டியினர் இடையே உள்ள பிரச்னையால் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில், கடந்த சில ஆண்டுகளாக மாநகராட்சியின் சார்பில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் 14ஆம் தேதி அவனியாபுரம், 15ஆம் தேதி பாலமேடு,16 ஆம் தேதி உலகபுகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆகிய 3போட்டிகளை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் முன் பதிவு தொடங்கியது. இதில், இதில் ஏராளமான இளைஞர்கள், காளை உரிமையாளர்கள் ஆர்வமுடன் பதிவு செய்துள்ளனர்.
அதன்படி இந்த ஆண்டும் 54.26 லட்சம் மதிப்பீட்டில் இதற்கான ஏற்பாட்டு பணிகளுக்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டு ஒரு வாரத்துக்கு முன்பாக ஜல்லிக்கட்டு ஏற்பாடு பணிகள் துவங்கி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வாடிவாசலில் இருந்து வெளியேறிய பிறகு பார்வையாளர் பார்ப்பதற்கு ஏற்றால் போல் நின்று பார்க்கும் வசதி என பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த காலங்களில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் அருகே மட்டுமே இரும்பு தடுப்பு அமைக்கப்படும். இதனால் ஜல்லிக்கட்டு காளைகள் பல்வேறு வழியாக வெளியேறி சென்று மக்களை குத்தி காயம் ஏற்படும் சூழலும் இருந்தது. இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 1.8 கி.மீ தொலைவிற்கு 8 உயர இரும்பு வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் காளைகள் தப்பி செல்லவது தடுக்கப்பட்டு விபத்து குறையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து 1.8 கி. மீ தொலைவு அமைக்கப்படும்
வேலியை ஆய்வு செய்தனர். வேலிகள் முறையாக இல்லாத இடத்தில் முறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கினர்.
What's Your Reaction?