கடத்தலில் 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கு.. காவல், ஐ.டி அதிகாரிகளின் ஜாமின் மனு தள்ளுபடி..!
தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர், வருமான வரித்துறை அதிகாரிகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த தொழிலதிபர் ஜூனைத் அகமது தனது ஊழியரான சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து தனது நிறுவனத்திற்கு சி.டி.ஸ்கேன் வாங்க அனுப்பி உள்ளார்.
பணத்துடன் வந்த முகமது கவுசை சீருடையில் இருந்த திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங் வழிமறித்துள்ளார்.
இது ஹவாலா பணம் எனக்கூறி வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பரதீப், பிரபு ஆகியோர் உதவியுடன் காரில் கடத்தி மிரட்டி 20 லட்சம் ரூபாயில் ஐந்து லட்சம் ரூபாயை திரும்ப அளித்து பதினைந்து லட்சத்தை பறித்து சென்றனர்.
இதுதொடர்பாக முகமது கவுஸ் அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் சிசிடிவி ஆதாரங்களின்படி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன்க்கோரி சென்னை அமர்வு முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, தங்களுக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தவறான நோக்கத்துடன் செயல்படவில்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
காவல்துறை சார்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, இந்த விவகாரத்தில் வேறொரு சிறப்பு உதவி ஆய்வாளரும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை எனக்கூறினார்.
மேலும், கையும் களவுமாக பிடிப்பட்ட நான்கு பேரும் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜாமீன் வழங்கினால் தலைமறைவாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.
காவல்துறை வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு நால்வரும் தங்களது பதவியை தவறாக பயன்படுத்தி உள்ளதாக கூறி அவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?