Independence Day 2024 : ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Governor RN Ravi Tea Party on Independence Day 2024 : ஆளுநரின் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக, தமாகா மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் பங்கேற்க உள்ளன. இதேபோல் அதிமுகவும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Aug 15, 2024 - 20:21
Aug 16, 2024 - 15:24
 0
Independence Day 2024 : ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
RN Ravi And MK Stalin

Governor RN Ravi Tea Party on Independence Day 2024 : ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் அன்று அரசியல் கட்சி தலைவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்தார். 

ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாலும், அரசின் கொள்கைகளுக்கு எதிராக பேசி வருவதாலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், கொங்கு மக்கள் முன்னேற்ற கழகம், மமக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.

இதேபோல் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ''ஆளுநரின் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்க உள்ளதா? புறக்கணிக்க உள்ளதா?'' என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த தங்கம் தென்னரசு, ''முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் பதவிக்கு எப்போதும் மதிப்பு அளிப்பவர். அந்த வகையில் ஆளுநரின் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில்  முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பார்கள்.

அதே வேளையில் ஆளுநரின் தேநீர் விருந்தை(Tea Party Boycott) திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு செய்துள்ளோம். ஆளுநரின் மக்கள் விரோத கொள்கைக்கு திமுக எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கும். ஆனால் அரசியல் என்பது வேறு; அரசு என்பது வேறு. அந்த வகையில் ஆளுநரின் தேநீர் விருந்தில் அரசு சார்பில் பங்கேற்க உள்ளோம்'' என்றார்.

ஆளுநரின் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில்(RN Ravi Tea Party) பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக, தமாகா மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் பங்கேற்க உள்ளன. இதேபோல் அதிமுகவும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதற்கு ஒருபக்கம் ஆதரவும், மறுபக்கம் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

''தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளது சரியான முடிவு. இது ஆளுநர் பதவிக்கு முதல்வர் அளிக்கும் மரியாதையை காட்டுகிறது. மறுபக்கம் திமுக, ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்கிறது'' என்று சிலரும், ''மத்திய அரசு தமிழ்நாடு அரசையும், மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜக அரசின் குரலாக இருந்து வருகிறார். ஆகவே தேநீர் விருந்தை முதல்வர் புறக்கணித்திருக்க வேண்டும்'' என்று ஒரு தரப்பினரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow