அரசியல்

திமுக அமைச்சருடன் மீண்டும் மோதல்.. வெள்ளத்தால் கூட்டணிக்குள் புகைச்சல்

மதுரையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேரிடர்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரை மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் டேக் செய்திருப்பது கூட்டணிக்குள் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியது.

திமுக அமைச்சருடன் மீண்டும் மோதல்.. வெள்ளத்தால் கூட்டணிக்குள் புகைச்சல்
சு.வெங்கடேசன் அமைச்சர் மூர்த்தி மீண்டும் மோதல்?

மதுரையில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை [22-20-24] அன்று நள்ளிரவு பெய்த ஒருமணி மழையால், மாவட்டத்தின் விளாங்குடி, கூடல் நகர், ஆனையூர், செல்லூர், பந்தல்குடி, நரிமேடு, பனங்காடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.

இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்புள்ளாக்கியது. ஒரு மணி நேரம் பெய்த மழையால் மழை நீர் வடிகால்களின் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் போல சூழ்ந்தன. இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பு தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதில், அதீத மழை மற்றும் எதிர்பாராத வெள்ள நீரால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் நிர்வாகத்தின் கவனக்குறைவாலும், முன்னெச்சரிக்கை இன்மையாலும் மக்கள் இன்னலுக்கு உள்ளாவதை ஏற்க முடியாது என பதிவிட்டு இருந்தார்.

மேலும், அந்த பதிவினை பேரிடர்துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவின் X தள பக்கங்களை டேக் செய்து எச்சரிக்கை விடுப்பது போல பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏனெனில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, ‘மதுரை மாவட்டத்தில் மழைக்கால தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத அளவிற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சரின் கருத்துக்கு நேர் எதிராக தனது எக்ஸ் தளத்தில் சு.வெங்கடேசன் மாவட்ட நிர்வாகத்தின் கவனக்குறைவு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை என குறிப்பிட்டு பதிவு செய்துள்ளது மதுரை அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கும் அமைச்சர் மூர்த்திக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விவகாரத்தில் கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால், இருவரும் மறைமுகமாக ஒருவருக்கொருவர் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். இதனால், கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.