மழையால் ரத்தான ரயில்கள்.. பரிதவிக்கும் பயணிகள்..!

ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை பாதிப்பினால், விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் இடையில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Dec 2, 2024 - 09:20
Dec 2, 2024 - 10:47
 0
மழையால் ரத்தான ரயில்கள்.. பரிதவிக்கும் பயணிகள்..!

விக்கிரவாண்டி-முண்டியப்பாக்கம் இடையே பாலத்தில் வெள்ளநீர் அதிகரித்திருப்பதால் சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சென்னை - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத், சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ், காரைக்குடி - சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய  5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில், தண்ணீர் தேங்கி நிற்கிறது.  இந்த மழையினால், பெரும்பாலான மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.   

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் இடையே பாலம் எண் 452 -ல் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பல ரயில்கள் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரயில்கள் மாற்று வழியிலும், சில ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில ரயில்கள் மாற்றுப்பாதையில் சென்னை வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சூழலை கருத்தில் கொண்டு சிரமத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி, அரக்கோணம் சென்னை கடற்கரை வழியாக சென்னை எழும்பூர் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் நெல்லை எக்ஸ்பிரஸ் வரும் அதே வழித்தடத்தில் இயக்கப்பட்டு எழும்பூர் வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து நேற்று புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் விழுப்புரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதே போல சென்னை நோக்கி செல்லும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் எழும்பூரில் இருந்து விழுப்புரம் வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில், தேஜஸ் விரைவு ரயில், சோழன் விரைவு ரயில், குருவாயூர் விரைவு ரயில், பாண்டிச்சேரி MEMU ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம் முதல் தாம்பரம் வரை செல்லக்கூடிய MEMU பயணிகள் ரயில், புதுச்சேரி முதல் சென்னை எழும்பூர் வரை செல்லக்கூடிய விரைவு ரயில், காரைக்குடி முதல் சென்னை எழும்பூர் வரை செல்லக்கூடிய "பல்லவன்" அதிவிரைவு ரயில், மதுரையிலிருந்து புறப்படும் "வைகை அதிவிரைவு ரயில், திருநெல்வேலி முதல் சென்னை எழும்பூர் வரை செல்லக்கூடிய வந்தே பாரத் விரைவு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் தஞ்சாவூரில் இருந்து புறப்படும் உழவன் விரைவு ரயில் , மன்னார்குடியில் இருந்து புறப்படும் விரைவு ரயில், காரைக்காலில் இருந்து புறப்படும் விரைவு ரயில், சிலம்பு அதிவிரைவு ரயில் உள்ளிட்ட ரயில்கள் காட்பாடி வழியாக மாற்று வழி பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் சென்னை நோக்கி வரும் ரயில்கள் விழுப்புரம் ரயில் நிலைய சந்திப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தென் மாவட்டத்திற்கு செல்லும் ரயில்கள் நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow