செல்போன் பேசினால் பணியிடை நீக்கம்.. அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு வைத்த செக்
அரசுப் பேருந்தை இயக்கும் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் போக்குவரத்து ஓட்டுநர்கள் பேருந்து இயக்கும் போது செல்போன் உபயோகப்படுத்துவதாக அண்மைக் காலமாக பல செய்திகள் வெளிவருகின்றன. ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கும் பொழுது போன் பேசுவது, ரீல்ஸ் செய்வது தொடர்பாக பல வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அரசு பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் உபயோகிப்பது தொடர்பாக பயணிகள் புகார் தெரிவித்து அரசு நடவடிக்கை எடுத்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கும் போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரசு பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர். தொடர்ந்து, செல்போனை பயன்படுத்திக் கொண்டு ஒட்டுநர்கள் பேருந்துகளை இயக்கும் வீடியோ வெளிவருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து போக்குவரத்து மண்டல் அதிகாரிகளுக்கும் போக்குவரத்து துறை சார்பில் உத்தரவு அனுப்பப்பட்டு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ஒருவர் ஒரு கையில் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு போக்குவரத்து கழகம், செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கியவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் கனகராஜ் என்பதை கண்டறிந்தனர்.
அவர், தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்றபோது செல்போன் பேசியபடி பேருந்து இயக்கியது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து கனகராஜை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன் பேருந்து ஓட்டுநர்கள் அலட்சியமாக செயல்படுவது தடுக்கப்படும் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?