அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய QR கோடு மூலம் அனுமதி.. விரைவில் அமல்படுத்த திட்டம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து  பல்கலைக்கழக வளாகத்தில் நுழைவதற்கு கியூஆர் கோடுடன் கூடிய அனுமதி வழங்கும் வகையில் விசிட்டர் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் அமைக்கப்பட உள்ளது. 

Jan 24, 2025 - 07:44
 0
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய QR கோடு மூலம் அனுமதி.. விரைவில் அமல்படுத்த திட்டம்
அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, பல்கலைக்கழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை  நிர்வாகம்  விதித்தது. மேலும் கடந்த 6-ந் தேதி முதல் வகுப்புகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும், பல்கலைக் கழக வளாகத்தில்  இருந்த புதர்கள் அகற்றப்பட்டு, காலியாக வைக்கப்பட்டதுடன் அனைத்து சிசிடிவி கேமராக்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.  மாணவர்களுக்கு உதவிபுரியும் வகையில் ஹெல்ப் டெஸ்க்குகள் (Help Desk) அமைக்கப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக் கழகத்தின் முக்கிய வாயில் , கோட்டூர்புரம் வாயில் , அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 3 வாயில்கள் மூலம் மட்டுமே அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் பல்கலைக்கழகத்தின் உள்ளே செல்ல முடியும். நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகில் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அலுவலகம் வழியாக வரும் வாயில் மூடப்பட்டது. சுற்றுசுவர்களில் ஏற்பட்ட உடைப்புகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.  

தொடர்ந்து, வெளியில் இருந்து பணிக்கு வருபவர்களை அனுமதிப்பெற்றவர்கள் காலையில் அழைத்து வந்து மாலை பணி முடிந்தப் பின்னர் அழைத்துச் செல்ல வேண்டும். இதற்கும் அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. பணி முடிந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு இரவு நேரங்களில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. வெளி ஆட்கள் வளாகத்திற்குள் யாரும் அனுமதி இல்லாமல் வர முடியாது. வாயிலில் அனுமதி சீட்டை பெற்றுக் கொண்டு வந்து அலுவலரை பார்த்து விட்டு, மீண்டும் அவரிடம் கையொப்பம் பெற்று தர வேண்டும். 

பாதுகாப்பு பணியில் கூடுதலாக 15  முன்னாள் ராணுவத்தினர் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்லும் வழிகளில் 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வகுப்பறைகள், அலுவலகம், விடுதிகளில் 938 சிசிடிவி கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. சம்பவம் நடைபெற்ற  பகுதியில் கூடுதலாக 11 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் செல்லும் வழித்தடங்களில் 550 மின்விளக்குள் பொருத்தப்பட்டுள்ளதுடன், அதிக ஒளி வீசும் வகையில் போகஸ் லைட் (Focus Light) பொருத்தப்பட்டுள்ளது. 

வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் துறைக்கான தேவைகளை குறித்த பின்னூட்டத்தை (feedback) மாணவர்கள் தெரிவிக்க கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கூடுதலாக தேவையான இடங்களில் மின்விளக்குள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. பல்கலைகழகத்தில் வெளிநபர்கள் நடைப்பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் அடையாள அட்டை அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கல்வி, மன அழுத்தம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க ஆலோசகர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வளாகத்திற்குள் அனுமதி பெற்று வரும் நபர்கள், அதற்கான அடையாள பாஸ் பெற்றுக் கொண்டு வரவேண்டும். பின்னர் வெளியில் செல்லும் போது அடையாள அட்டையை ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும் என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாலியல் குறித்து விழிப்புணர்வும், உளவியல் ஆலோசனைகளும் யுனஸ்கோ நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்பட உள்ளது. பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் சுற்றுசுவர்களின் உயரத்தை உயர்த்தி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

பல்கலைக் கழக வளாகத்திற்குள் வருபவர்களை கண்காணிக்கவும், அவர்கள் யாரை சந்திக்கின்றனர் என்பதை உறுதிச் செய்யவும், தேவையற்றவர்கள் யாரும் வாளத்திற்குள் வருவதை முற்றிலும் தடுக்கும் வகையில் வரும் காலத்தில் விசிட்டர் சிஸ்டம் கியூஆர் (QR) கோடுடன் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான ஆப் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் இருக்கும். அதனை செல்போனில் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் பல்கலைக் கழகத்தில் யாரை பார்க்க வேண்டும் என்பதை விண்ணப்பிக்க வேண்டும்.  சம்பந்தப்பட்டவர் பார்க்க விரும்பினால் அனுமதி அளிப்பார். அப்படி அனுமதி அளிக்கும் போதே அதன் விபரம் நுழைவு வாயிலில் உள்ள பாதுகாப்பு அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 

பார்க்க அனுமதிப் பெற்றவர் நுழைவு வாயிலில் பாதுகாப்பு அலுவலரிடம் கியூஆர் கோட் மூலம் பெற்ற அனுமதியை காண்பித்தால் அதனை அவர் ஸ்கேன் செய்துக் கொண்டு, அனுமதிக் கொடுப்பார். அனுமதிப் பெற்றவர் அந்த அலுவலரையோ , மாணவர்களையோ சந்தித்து விட்டு செல்லலாம். மேலும் அனுமதிப் பெற்றவர் வேறு நபரை சந்திக்க வேண்டும் என்றால், வளாகத்தில் இருந்து அதற்கும் அனுமதிக் கேட்டு பெற்ற பின்னர் சந்திக்கலாம். இதற்கான ஆப் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கியூஆர் கோடுடன் அனுமதி வழங்கும் முறை கொண்டு வரும் பணிகளும் நடைபெற்று வருகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow