முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஆர்டர்லி முறை.. தமிழக அரசு அறிக்கை தாக்கல்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் சிறைகாவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Jan 30, 2025 - 17:38
 0
முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஆர்டர்லி முறை.. தமிழக அரசு அறிக்கை தாக்கல்
கோப்பு படம்

புழல் மத்திய சிறையில்  அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனக்கூறி சுஜாதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் , தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறை வார்டன்கள் மற்றும் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும்  அதிகாரிகள் குறித்து சிபிசிஐடி மற்றும் உளவுத்துறை உதவியுடன் விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு  நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், உள்துறை செயலாளரின் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் விசாரணை நடத்தப்பட்டதாகவும், விசாரணையின் முடிவில் எந்த சிறைகளின் அதிகாரிகளின் வீடுகளிலும் சிறைக்காவலர்கள் ஆர்டர்லிகளாக பயன்படுத்தப்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

ஒரு சில அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக இருந்த சிறைக்காவலர்களும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆர்டர்லி முறை குறித்து எதிர்காலத்தில் புகார் வந்தால் அது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து ஆர்டர்லி முறையை ஒழிக்க விரைவாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், சிறைத்துறையில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டதை போல காவல்துறையிலும் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்களால் காவல்துறையில் ஆர்டர்லி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சீருடைகளை பராமரிப்பது, தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பது, உயரதிகாரிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது போன்றவற்றில் ஆர்டர்லிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், ஒரு போலீஸ் அதிகாரி பணியில் இருக்கும் பட்சத்தில், குறுகிய அறிவிப்பில் குற்றம் மற்றும் கலவரங்கள் நடக்கும் இடங்களுக்கு விரைந்து செல்ல வேண்டியிருக்கும். அதில், ஆர்டர்லி பயிற்சி பெற்ற சீருடை அணிந்தவர் மூத்த அதிகாரிக்கு துணையாகவும், உதவியாகவும் இருக்க வேண்டியிருந்தது. ஆனால், அதுவே காலப்போக்கில் சமைப்பதற்கும், துவைப்பதற்கும், அதிகாரிகளின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கும், அதிகாரியின் குடும்பத்திற்கு ஷாப்பிங் செய்வதற்கும், ஆர்டர்லிகள் தவறாகப் பயன்படுத்தப்பட தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow