தொப்புள் கொடியை துண்டித்த வீடியோ.. யூடியூபர் இர்ஃபான் மீது வழக்குப் பதிவு?
குழந்தையின் தொப்புள் கொடி வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், இர்பான் மீது வழக்குப்பதிவு குறித்து போலீஸார் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
யூடியூபில் ஃபுட் ரிவியூ செய்து அதன் மூலம் பிரபலமானவர் இர்ஃபான். இவரது யூடியூப் சேனலை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். ஆரம்பத்தில் ஃபுட் ரிவியூ மட்டும் செய்துவந்த இர்ஃபான், அதன்பின்னர் சினிமா நட்சத்திரங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை பலரையும் நேர்காணல் செய்து வருகிறார். இதனிடையே தனது திருமண நிகழ்ச்சிகளையும் யூடியூப் சேனலில் அப்லோட் செய்து செமையாக கல்லா கட்டினார். தற்போது அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் இர்ஃபான்.
இர்ஃபானின் மனைவி கர்ப்பமாக இருந்தபோது, அவரது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வீடியோவாக வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார் இர்ஃபான். இந்தியாவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது சட்டபடி குற்றம். இதனால் வெளிநாடு சென்றிருந்த போது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினைத்தை தெரிந்துகொண்டு அதனை வீடியோவாக வெளியிட்டார்.
இந்த விவகாரம் கடும் சர்ச்சையான நிலையில், இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் மருத்துவத்துறை விளக்கம் கேட்டிருந்த நிலையில், மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை இர்ஃபான் மன்னிப்பு வீடியோ கூட வெளியிடவில்லை.
இந்நிலையில், பிரபல யூடியூப்பர் இர்பான் அவரது மனைவியை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி அனுமதித்தார். அவருக்கு 24ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.
இது தொடர்பாக இர்பான் அவரே அவரது குழந்தைக்கு தொப்புள் கொடியை துண்டிப்பது குறித்த வீடியோ பதிவு செய்து கடந்த 19ஆம் தேதி யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதையடுத்து மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் மருத்துவ சேவைப்பிரிவின் இணை இயக்குனர் இளங்கோவன் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில், "ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் இர்பான் தனது குழந்தைக்கு தொப்புள் கொடியை வெட்ட வெட்டியதோடு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடட்டுள்ளார். எனவே இர்பான் மீதும், இதற்கு உடந்தையாக இருந்த மருத்துவர் நிவேதிதா மீதும் நடவடிக்கை வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து செம்மஞ்சேரி போலீசார் ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் செம்மஞ்சேரி போலீசார் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
What's Your Reaction?