த.வெ.க தலைவர் விஜயை சீண்டுகிறாரா? அமைச்சர் நாசர்..!
சினிமாகாரர்கள் சோல்ட் அவுட் ஆகிவிட்டால் நடிகைகள் விளம்பரத்திற்கு செல்கிறார்கள், நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று அமைச்சர் நாசர் பேசியுள்ளது அரசியல் வட்டாரம் மட்டுமில்லாமல், சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகின் உச்ச நடிகராக, கோடிகளில் சம்பளம் பெறும் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளதாக அறிக்கை வெளியிட்டார். அன்று முதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமில்லாது, பொதுமக்களும் உச்சரிக்கும் பெயராக தமிழக வெற்றிக்கழகத்தின் பெயரும், அதன் தலைவரின் பெயரும் மாறிவிட்டது. தொடர்ந்து அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது.
மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜய் நேரடியாக திமுகவை அரசியல் எதிரி என்று கூறினார். தொடர்ந்து விஜய் மாநாட்டில் பேசியது அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விஜய் பேச்சுக்கு எதிராகவும், அவரை விமர்சித்தும் திமுக தலைவர்கள் பேசுவது தொடர்கதையாகி வரும் நிலையில் நேற்று திமுக அமைச்சர் நாசர் பேசியது அரசியல் வட்டாரம் மட்டுமில்லாமல், திரையுலகிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மத்திய மாவட்ட பூந்தமல்லி நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் குமணன்சாவடியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் நாசர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது கட்சித்தொண்டர்களிடையே பேசிய அவர்,
நேற்று மழையில் பூத்த காளான் திமுக வை அழிக்க நினைக்கிறது என்று நடிகர் விஜயை மறைமுகமாக அமைச்சர் நாசர் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், சினிமாக்காரர்கள் சோல்ட் அவுட் ஆகிவிட்டால், நடிகைகள் நல்லெண்ணெய் வியாபரத்திற்கும், மற்றும் பொருட்களை விற்பனை செய்யும் விளம்பரத்துக்கு வந்து விடுவார்கள்.
நடிகர்கள் எல்லாம் போர்டு ஆகிவிட்டால் அரசியலுக்கு வருகிறார்கள். நான் தான் அடுத்த முதல்வர் என்று அப்படித்தான் ஒருவர் வந்துள்ளான் என்று ஒருமையில் பேசினார். ஒரு தொகுதிக்கு 2000 ஓட்டு வாங்கினால் அதிகம். அவன் எங்களை குறை சொல்கிறான் என்று அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் விமர்சனம் இருக்கலாம், தனிமனித தாக்குதல் இருக்க கூடாது. குறிப்பாக ஒருமையில் பேசுவது இருக்க கூடாது. இது ஆரோக்கியமான அரசியல் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
த.வெ.க கட்சியின் தொண்டர்களும், விஜயின் ரசிகர்களும், விழா மேடையில் திரையுலத்தின் உச்சமான தனது கரியரை உதறிவிட்டு, மக்களுக்காக வந்திருக்கிறேன் என்று நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் கூறியதை அமைச்சருக்கு நினைவில்லை போல என்று விமர்சித்து வருகின்றனர்.
.
What's Your Reaction?