விதிகளை பின்பற்றியே அரசு பணி நியமனம்... தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி..!
எதிர்காலத்தில் அரசு துறைகளில் விதிகளை பின்பற்றியே பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழக தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா என்பது குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுத்தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![விதிகளை பின்பற்றியே அரசு பணி நியமனம்... தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி..!](https://kumudamnews.com/uploads/images/202501/image_870x_6778e36264c43.jpg)
அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் கடந்த 1997 ஆம் ஆண்டு கணிப்பொறி உதவியாளராக தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்ட சத்யா என்பவர், பணி வரன்முறை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படும் பணியாளர்களை நிரந்தரம் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டால், அதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பல்கலைக்கழகங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிப்பது என்பது மிகப்பெரிய மோசடி என்றும் சுட்டிக்காட்டினர்.
பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் எதிர்காலத்தில் சட்ட விரோதமாக பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும், தேர்வு நடைமுறைகளை பின்பற்றியே நியமனங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா என பிப்ரவரி 13ஆம் தேதி பதில் அளிக்கும்படி தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தனர்.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)