தத்தெடுக்க விண்ணப்பித்ததால் வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

ரயில் கழிப்பிடத்தில் கண்டெடுத்து வளர்த்த ஒன்றரை வயது பெண் குழந்தையை, தத்தெடுக்க விண்ணப்பித்ததன் மூலம் மட்டும், வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Dec 26, 2024 - 18:23
 0
தத்தெடுக்க விண்ணப்பித்ததால் வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

ரயில் கழிப்பிடத்தில் கண்டெடுத்து வளர்த்த ஒன்றரை வயது பெண் குழந்தையை, தத்தெடுக்க விண்ணப்பித்ததன் மூலம் மட்டும், வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த சாவித்ரி என்பவர், தனது கணவர் ரவியுடன் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருநெல்வேலியில் இருந்து ஈரோடு நோக்கி, ரயிலில் வந்தனர். அப்போது, கழிப்பிடத்தில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையை கண்டெடுத்தனர். திருமணமாகி 20 ஆண்டுகள் கடந்தும் தங்களுக்கு குழந்தை இல்லாததால், அந்த குழந்தைக்கு ஜோஷ்ணா என பெயரிட்டு, தங்கள் மகளாக வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், ஈரோட்டில் குழந்தை கடத்தல் அதிகரித்துள்ளதாக முதல்வர் சிறப்புப் பிரிவுக்கு வந்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய குழந்தைகள் நலக் குழு, கடந்த ஆகஸ்ட் மாதம் குழந்தையை மீட்டு, குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டது.

பாசத்துடன் வளர்த்த குழந்தையை தத்தெடுக்க விண்ணப்பித்துள்ள நிலையில், காப்பகத்தில் சேர்க்கப்பட்ட குழந்தையை மீட்டுத்தரக் கோரி சாவித்ரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு, ரயிலில் குழந்தையை கண்டெடுத்ததை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல், அதை தங்கள் வசம் வைத்துக் கொண்டது சட்டவிரோதமானது எனவும், அரசு கட்டுப்பாட்டில் தான் குழந்தை உள்ளதால், அது சட்டவிரோத காவலில் இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.

மேலும், குழந்தைகள் தத்தெடுக்க ஏராளமான நடைமுறைகள் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், தத்தெடுக்க விண்ணப்பித்ததன் மூலம் மட்டும், அதை வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் உண்மையான தாய் - தந்தையை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பெற்றோரை கண்டுபிடிக்க முடியாவிட்டால், அதுகுறித்து சட்டப்படி அறிவிப்பை வெளியிட்டு, சட்டவிதிகளின்படி தகுதியான தம்பதிக்கு தத்து கொடுக்கலாம் எனவும் உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow