அம்பேத்கர் குறித்து பேசுவது ஃபேஷனாகிவிட்டது.. அமித்ஷா கருத்து.. வெடித்த பிரளயம்
மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய சர்ச்சை கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. இதில், மாநிலங்களவையில் நேற்று அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ’அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது தற்போது ஃபேஷன் (Fashion) ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை பலமுறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார். அமித்ஷாவின் இந்த பேச்சு நாடாளுமன்றத்தில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ், திமுக, இந்தியா கூட்டணி எம்.பிக்கள் அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாகவே போராட்டம் நடத்தினர். இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கையில் அம்பேத்கர் புகைப்படம் அடங்கிய பதாகைகளுடன் அமித்ஷாவை மன்னிப்பு கேட்க கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, திமுக எம்.பி டி.ஆர் பாலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்சனையாகத்தான் தெரிவார் என்று அமித்ஷாவை ராகுல் காந்தி சாடினார்.
இச்சம்பவம் குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது, அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்துள்ளார். பாஜக-வில் இருப்பவர்கள், யாருக்கும் மரியாதை கொடுப்பதில்லை. அம்பேத்கர் கடவுளுக்கு குறைந்தவர் அல்ல. சொர்க்கத்தை பற்றி எங்களுக்கு தெரியாது. ஆனால், அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் இல்லை என்றால் நீங்கள் பழங்குடியினரையும், தலித்துகளையும் பூமியில் வாழவிடமாட்டீர்கள் என்று கூறினார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது, பாஜக-வினர் முதலில் காந்தியையும், நேருவையும் அவதிமதித்த நிலையில் தற்போது அம்பேத்கரையும் அவதிமதித்துள்ளனர். நாட்டின் சுதந்திரத்தில் பாஜகவிற்கும், ஆர்.எஸ்.எஸுக்கும் எந்த பங்களிப்பும் இல்லை. அதனால் அவர்கள் தற்போது மிகப்பெரிய ஆளுமைகளை இழிவுப்படுத்துகிறார்கள். அம்பேத்கர் எங்களுடைய ஃபேஷன் (Fashion) மற்றும் மோட்டிவேஷன் (Motivation) ஆவார் என்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் தவறாக பயன்படுத்துவதுடன் அவரின் கொள்கைகளை பின்பற்றவில்லை என்றுதான் அமித்ஷா கூறினார். அதனை, காங்கிரஸ் திரித்து பேசுவதாக அவர் பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?