பொங்கல் தொகுப்போடு இரண்டாயிரம் வழங்க கோரிக்கை.. பாஜக மனுவை நிராகரித்த நீதிமன்றம்
பொங்கல் தொகுப்புடன் இரண்டாயிரம் ரூபாய் வழங்க கோரி பாஜக தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
தமிழகத்தில் வரும் 14-ஆம் தேதி பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு அந்த தொகை வழங்குவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதையடுத்து, பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று பல கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தமிழக மக்கள் பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்களது உடைமைகளையும், பொருளாதாரத்தையும் இழந்து, விவசாய பயிர்கள் முற்றிலுமாக நாசமாகி, அனைத்து தரப்பு மக்களும், மிகப்பெரிய சோகத்தில் உள்ளதால். வரும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட கடந்த ஆண்டை போல தமிழக அரசு இந்த ஆண்டும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்க கோரி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் சார்பாக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஏற்கனவே ஒரு பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இன்று மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தலைமை வழக்கறிஞர் ஸ்ரீ ராம் அடங்கிய அமர்வில் ஆஜராகி இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். பொங்கல் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வர இருப்பதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து, தகுந்த நிவாரணம் அளிக்க உத்தர வேண்டும் என முறையிட்டார். ஏற்கனவே இந்த நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டும் வழக்கு பட்டியலிடப்படவில்லை என்றும் முறையிட்டார்.
அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி ஸ்ரீராம், ஏற்கனவே நாங்கள் இந்த மனுவில் அவசர வழக்காக விசாரிக்க எந்த விதமான முகாந்திரமும் இல்லை என்று நிராகரித்த பிறகு மீண்டும் நீங்கள் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கூறுவதை ஏற்க முடியாது. இது போன்று தொடர்ந்து அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டால் மனுதாரருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என்று கூறி இந்த பொதுநல மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று காட்டமாக தெரிவித்து மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
What's Your Reaction?