அம்பேத்கர் பெயரை தான் சொல்வோம்.. கிளம்பிய எதிர்ப்பு.. விழிபிதுங்கிய அமித்ஷா
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த சர்ச்சை கருத்திற்கு தமிழக கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. இதில், மாநிலங்களவையில் நேற்று அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது தற்போது ஃபேஷன் (Fashion) ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை பலமுறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார். அமித்ஷாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர். நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அம்பேத்கரின் புகைப்படம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அமித்ஷாவை மன்னிப்பு கேட்க கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, திமுக எம்.பி டி.ஆர் பாலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அமித்ஷாவின் இந்த சர்ச்சை கருத்திற்கு டெல்லியில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்! என்று பதிவிட்டுள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும். அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்! வாழ்க அம்பேத்கர்! அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்! என்று சாடியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தனது சமூக வலைதள பதிவில், புரட்சியாளர் அம்பேத்கரை பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்? எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம். அரசியலமைப்புச் சட்டமும், புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள். புரட்சியாளர் அம்பேத்கர் "விசுவரூபம் " எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும்! என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர். அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர்... அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவரை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?