விநாயகர் சதுர்த்தி: வெற்றி தரும் விநாயகர் ஜாதகம்... வீட்டில் வைத்து வணங்கினால் என்னென்ன நன்மைகள்

விநாயகர் ஜாதகத்தை அச்சிட்டோ, வரைந்தோ அதன் கீழ் விநாயகருக்குரிய பாடலை எழுதி, பூஜை அறையில் வைத்து கோலமிட்டு வழிபட மனம் மகிழும் சம்பவங்கள் தினமும் நடைபெறும். இந்த ஜாதகத்தை வியாபாரம் செய்யும் இடத்தில் வைத்து வழிபட்டால் வியாபாரத்தில் விருத்தி ஏற்படும்.

Sep 6, 2024 - 07:02
Sep 7, 2024 - 10:13
 0
விநாயகர் சதுர்த்தி: வெற்றி தரும் விநாயகர் ஜாதகம்... வீட்டில் வைத்து வணங்கினால் என்னென்ன நன்மைகள்
vinayagar jathagam


விநாயகர் சதுர்த்தி நாளை செப்டம்பர் 7ஆம் நாள் சனிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் விநாயகரைப் பற்றிய சிறப்புகளைப் பற்றியும் அவரது அவதார மகிமை, அவரது ஜாதகத்தில் உள்ள சிறப்புகளைப் பற்றி பார்க்கலாம். 

சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று  இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர். எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம்  சரண் அடைந்தனர். தேவ மைந்தன் அவதாரம் செய்வதற்கான நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்த சிவபெருமான் அதற்கான வேலைகளை தொடங்கினார்.

பார்வதிக்கு அழகான பிள்ளை வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அதற்காக ஒரு படத்தை உருவமாக வரைந்தாள். ஆனால் அந்த படம் கை தவறி தும்பிக்கையுடன் கூடிய பிள்ளையாக மாறியது. எல்லாம் நன்மைக்கே என்று பார்வதியிடம் கூறினார் சிவன்.  தனக்கு காவலாக இருந்த நந்தி சிவனுக்கு விசுவாசமாக இருந்ததால் தனக்காக ஒரு பிள்ளையை மஞ்சளை பிடித்து வைத்து உருவாக்கி உயிர் கொடுத்தார் பார்வதி. அந்த பிள்ளை சிவபெருமானையே வீட்டிற்கு வர விடவில்லை. இதனால் கோபம் கொண்ட சிவன் அந்த பிள்ளையின் தலையை வெட்டினார். 

மகனின் தலை வெட்டப்பட்டது கண்டு கதறிய பார்வதி தனது கணவர் சிவன் மீது கோபம் கொண்டார். பிள்ளையை உயிர்ப்பிக்க வேண்டும் என்று வேண்டவே, சிவபெருமான் ஆணைப்படி வடக்குப் பக்கம் சென்றனர். அங்கே முதலில் தென்பட்டது யானைதான். அதன் தலையை எடுத்து வந்து வெட்டுப்பட்ட குழந்தையின் தலையோடு ஒட்டவைத்தனர். இது நடந்தது  ஆவணி மாத சதுர்த்தி. பார்வதி படமாக வரைந்தது நிஜத்தில் உண்மையானது.  யானை முகத்தோடும், மனித உடலோடும் இருந்த விநாயகரை அசுரன் கஜமுகாசுரனை வதம் செய்ய  அனுப்பி வைத்தார் சிவபெருமான். 

விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் விநாயகர் பெருமான் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை அழிக்க  ஏவினார். அசுரனோ, மூஞ்சூறாக வந்து எதிர்த்து நின்றான். விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார். பின்னர் அவர் மூஞ்சூறையே  தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன்மூலம் அனைவரும் சுபிட்சம் பெற்றனர். அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தி விநாயகர்  சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் தீராதவினைகள் தீரும். சகல பாக்கியங்கள் கிடைக்கும்.

விநாயகர் விருச்சிக லக்னத்தில் கன்னி ராசியில் ஹஸ்த நக்ஷத்திரத்தில்  பிறந்தவர். லக்னத்தில் கேது, மூன்றாமிடமாகிய தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம். ஏழில் சனி, ராகு, ஒன்பதாமிடமாகிய பாக்கிய ஸ்தானத்தில் குரு உச்சம், பத்திலே சூரியன் ஆட்சி, பதினொன்றாம் வீடாகிய கன்னியில் சந்திரன் உச்ச புதன் மற்றும் நீச சுக்கிரனுடன் சேர்ந்து நிற்கிறார்கள். 

விருச்சிக ராசியை லக்னமாக கொண்டவர்கள் அளவிலா ஞானத்தையும் எப்படியாவது அடுத்தவரை வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருப்பார்கள். மாம்பழத்துக்காக தாய்தந்தையை சுற்றி தம்பியை வென்ற சாதுர்யம் யாருக்கு வரும்? கேது பகவான் விநாயகரின் ஜாதகத்தில் லக்னத்தில் நின்று தன் ஞானகாரகத்தை சிறப்புற அமைத்துக்கொண்டார் என்பதுதான் சரியாக இருக்கும். மேலும் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மிகவும் எளிமையானவர்களாக இருப்பார்கள். 

அரசமரத்தடியில் வசிப்பதற்க்கு இதுவே காரணம் எனலாம். தனம், வாக்கு குடும்பம் மற்றும் புத்திர ஸ்தானாதிபதியாகிய குரு பாக்கியஸ்தானத்தில் உச்சம். ஆகவே மிகவும் செல்வாக்கும் சொல்வாக்கும் நிறைந்தவர். பணம் நிறைந்த மும்பைவாசிகளும் வட இந்தியர்களும் விநாயகரை வணக்கும் ரகசியம் இதுதான். 

புத்திர தடை நீக்குபவர் யானையின் காரகர் குரு பாக்கியஸ்தானத்தில் உச்சமானது யானையின் தலையை முகமாக கொள்ளும் பாக்கியத்தை தந்தது. மூன்றாம் வீடாகிய தைரிய, சகோதர ஸ்தானத்தில் செவ்வாய் உச்சமாகி வேகத்தின் அதிபதியாகிய குமரக்கடவுளே சகோதரராக அமைந்தார். இளைய சகோதரருடன் இணக்கமாக இருந்தவர் விநாயகர். இளைய சகோதரருக்கு நிறைய உதவி செய்தவர் என புராணங்கள் சொல்கின்றன. 

மூன்றில் உச்சம் பெற்ற செவ்வாய் காரகோபாவ நாஸ்தி என்பார்கள். ஆனால் அதை உடைக்கும் வண்ணம் மோகினி பாலனான ஸ்ரீ ஐயப்பனையும் சகோதரனாக அடைந்ததையும் குறிப்பிட வேண்டும். மூன்றாம் வீட்டில் செவ்வாய் பகைவீட்டில் நின்றதால் ஒரு சமயம் பழத்திற்க்காக சகோதரனயும் எதிரியாக்கியது. நான்காம் அதிபதி சனி நட்பு வீடாகிய ரிஷபத்தில் சனி ராகுவோடு சேர்ந்து நின்றது தாயாரின் அளவிலா பாசத்திற்கு காரணமாகியது.

சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க் கையிலும், வியாழனை தலையிலும், வெள்ளியை இடது கீழ்க் கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு விநாயகர் காட்சியளிக்கிறார். இத்தகைய நவகிரக விநாயகரை மனமார நினைத்து வழிபடுபவர்களுக்கு, நவகிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகள் வராது.

மண்ணுக்கு அடியில் இருக்கும் பொருட்களெல்லாம் சனிதான் காரகர். நிலத்தை தோண்டுவதும் சனிதான் காரகர். வாகன ஸ்தானாதிபதியாகிய சனி திக்பலம் பெற்றது நிலத்தை குடைந்து செல்லும் எலியை வாகனமாக்கியது ஆறாம் வீட்டதிபதி மூன்றில் உச்சமானது அனைவரின் கடன் நோய் எதிரிகளை களைவதில் முதன்மையானவர் என்கிறது. 

மறைந்த புதன் நிறைந்த கல்வி என்பார்கள். எட்டு பதினோறாம் வீட்டின் அதிபதியான புதன் காலபுருஷனுக்கு மறைவு ஸ்தானமான கன்னியில் நின்றது நான்மறைகளும் விநாயகரிடம் பணிந்து நின்றது. பாக்கியஸ்தானமாகிய கடகத்தில் குரு உச்சம் பெற்றதும் பாக்கிய ஸ்தானாதிபதி கன்னியில் நின்றதும் நித்திய ப்ரும்மசாரியான இவரை பல கன்னிப்பெண்கள் திருமண பாக்கியம் வேண்டி சுற்றி சுற்றி வர செய்தது. 

ஏழில் சனி நின்றால் திருமணத்தடை என்பார்கள். கால தாமத திருமணம் என்றும் கூறுவார்கள். ஏழிலே சனி திக்பலம் பெற்று ராகுவோடு சேர்ந்து நின்றதும் ஏழாமதிபதி கன்னியில் நீசமடைந்ததும் தென்னிந்தியாவில் திருமணமாகாதவராக நிறுத்தியது. பின் புதனோடும் சந்திரனோனும் சேர்ந்து நீசபங்க ராஜயோகத்தை ஏற்படுத்தியதால் வட இந்தியாவில் சித்தி புத்தி எனும் இருவரின் மணாளனாக்கி மாப்பிள்ளை விநாயகராக்கியது. 

பத்தாமதிபதி சூரியன் பத்திலே ஆட்சி பெற்றது எதிலும் முதல்வராக்கி முழுமுதற்கடவுளாக்கியது. மேலும் அனைத்து இடங்களிலும் சூரியனைபோல் நீக்கமற வியாபித்து நிற்க செய்தது. மேலும் பல அசுரர்களை போரில் வெற்றி கொள்ள வழிவகுத்தது. பதினோறாம் வீடு ஆசைகளை நிறைவேற்றும் இடம். இங்கு புதன் உச்சம் ஆகி உணவின் காரகர் சந்திரனோடு சுவையான உணவின் காரகர் மற்றும் இனிப்பின் காரகர் சுக்கிரன் நீசபங்க ராஜயோகத்தை பெற்றதால் மோதகப் பிரியராக்கியது.

விநாயகரின் ஆசையே கொழுக்கட்டைதான். கையினை குறிக்கும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பிறந்ததால் கையில் எப்போதும் கொழுக்கட்டை மற்றும் மோதகத்தை ஏந்தி நிற்க செய்தது. குரு ஆட்சி உச்சம் பெற்றவர்கள் பொதுவாக குண்டாக இருப்பார்கள். உணவின் காரகர்கள் காலபுருஷனுக்கு வயிற்றை குறிக்கும் இடத்தில் நின்றதாலும் போஜன ஸ்தான குரு உச்சம் பெற்றதாலும் உலகத்தையே தொப்பையாக பெற்று உலகில் உணவு பஞ்சத்தை போக்குகிறது. பன்னிரெண்டாமதிபதி சுக்கிரன் நீசபங்க ராஜயோகமடைந்ததால் காமத்தை வென்ற நித்திய பிரம்மச்சாரியாக்கியது. பலரின் புத்திர தோஷத்தை தீர்க்கும் அமைப்பானது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயகர் ஜாதகத்தை அச்சிட்டோ, வரைந்தோ அதன் கீழ் விநாயகருக்குரிய பாடலை எழுதி, பூஜை அறையில் வைத்து கோலமிட்டு வழிபட மனம் மகிழும் சம்பவங்கள் தினமும் நடைபெறும். இந்த ஜாதகத்தை வியாபாரம் செய்யும் இடத்தில் வைத்து வணங்கினால் வியாபாரம் செய்யும் இடத்தில் விருத்தி ஏற்படும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow