ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்ட திருமாவளவன்.. ஸ்டாலினை சந்திக்க காரணம் என்ன? பரபர பின்னணி

2026 சட்டசபை தேர்தலை நோக்கி தமிழ்நாட்டு அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என திட்டவட்டமான முடிவை நடைமுறைப்படுத்தி வருகிறது அதிமுக. இதனால் திமுக கூட்டணியில் தொகுதிகளை அதிகம் பெற வேண்டும் என விரும்புகிற கட்சிகள் இப்போதே அண்ணா திமுக கூட்டணியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.

Sep 16, 2024 - 10:24
 0
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்ட திருமாவளவன்.. ஸ்டாலினை சந்திக்க காரணம் என்ன? பரபர பின்னணி
vck tirumavalavan meets tamil nadu chief minister mk stalin

தேர்தலின் போது சீட் ஒதுக்கீட்டில் மட்டும் பங்கு கொடுப்பதை விட ஆட்சி அதிகாரத்திலும் பங்கு கொடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசியது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. திமுகவினர் பலரும் விசிகவிற்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர். திமுக கூட்டணி குளத்தில் கல்லெறிந்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார் திருமாவளவன். அமெரிக்காவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் திரும்பியுள்ள நிலையில்  அவரை சந்திந்து விளக்கம் தரப்போகிறார் விசிக தலைவர் திருமாவளவன். 

திமுக கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து இரண்டு மக்களவைத் தேர்தல் ஒரு சட்டசபைத் தேர்தலை சந்தித்து உள்ளார் திருமாவளவன். கூட்டணியில் இருந்தாலும் ஆட்சிக்கு எதிராக விசிக எடுக்கும் நடவடிக்கைகள் சில நேரங்களில் சலசலப்பை ஏற்படுத்தும். இப்போதும் அப்படித்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாட்டுக்கு அண்ணா திமுகவுக்கு அழைப்பு விடுத்தார் திருமாவளவன். இதனை திமுக தலைமை ரசிக்கவில்லை என கூறப்படுகிறது. 

இது ஒருபுறம் இருக்க திமுக தலைமையை சீண்டும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திருமாவளவன் பேசியுள்ள வீடியோ அவரது எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டது. அத்துடன் நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போதும், மத்தியில் 1975ஆம் ஆண்டு முதலே கூட்டணி ஆட்சிதானே நடைபெறுகிறது. அப்படியானால் தமிழ்நாட்டிலும் கூட்டணி ஆட்சி நடைபெறுவதில் தவறு எதுவும் இல்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை தேர்தல் அரசியலுக்கு வந்த காலம் முதலே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது எனவும் பேசியிருந்தார் திருமாவளவன்.

திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணியில் இணையப்போகிறாரா திருமாவளவன் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று திருமாவளவன் சந்தித்து பேசுகிறார். அமெரிக்காவில் இருந்து தமிழ்நாடு திரும்பிய முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக திருமாவளவன் சந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் கூட்டணியில் திருமாவளவன் ஏற்படுத்துகிற சலசலப்புகள் குறித்து இன்றைய சந்திப்பில் இருவரும் விவாதிக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow