மத்திய பட்ஜெட் 2024.. 7வது பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்.. என்ன சொல்லப்போகிறார்?

Union Interim Budget 2024 : தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன்(Nirmala Sitharaman) மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து, தனது பட்ஜெட் உரையை வாசிக்கும் போது ஏதாவது ஒரு சங்ககாலப் பாடல் வரிகளை மேற்கோள்காட்டியே வாசித்து வருகிறார்.

Jul 23, 2024 - 06:43
Jul 23, 2024 - 11:01
 0
மத்திய பட்ஜெட் 2024..  7வது பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்.. என்ன சொல்லப்போகிறார்?
nirmala sitharaman budget 2024

Union Interim Budget 2024 : மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் போது மத்திய நிதி அமைச்சர்கள்(Finance Minister) திருக்குறள் தொடங்கி புறநானூறு பாடல் வரை மேற்கோள் காட்டி வாசிப்பார்கள்.  தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன்(Nirmala Sitharaman) மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து, தனது பட்ஜெட் உரையை வாசிக்கும் போது ஏதாவது ஒரு சங்ககாலப் பாடல் வரிகளை மேற்கோள்காட்டியே வாசித்து வருகிறார். மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்வதை ஒட்டி, அதைப்பற்றிய எதிர்பார்ப்புகளும், விவாதங்களும் களைகட்டும். இன்றைய பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பட்ஜெட் உரை: 

வரிவிதிப்பு என்பது சங்ககாலம் தொட்டே இருந்து வருகிறது. ஆனால், ஒவ்வொரு ஆட்சி முறையிலும் ஒவ்வொரு விதமாக வரிவிதிப்பு முறை இருந்து வந்தது.  மனித இனம் சமுதாயமாக வாழத் தொடங்கிய போதே வரி விதிப்பு முறை தொடங்கி விட்டதாகவே பல செய்திகள் தெரிவிக்கின்றன.

வரி வசூல் எப்படி: 

நாட்டை வளப்படுத்தவும் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்யவும் மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே பலவிதமான வரிமுறைகளை மக்களை பாதிக்காதவாறு ஏற்படுத்தி நாட்டை வளப்படுத்தி வந்தனர். ஒரு மன்னன், மக்களிடம் வரி வாங்கும் முறையைச் சொல்லும் சங்க இலக்கியப் பாடல் ஒன்று, "மலர் ஒன்று தன் வலியை உணராதவாறு வண்டு தேன் எடுப்பதைப் போல மன்னன் செயல்பட வேண்டும்"என்று அறிவுறுத்துகிறது.

நிர்மலா சீதாராமன்: 

இதைத்தான், தற்கால  ஆட்சியாளர்களும் பட்ஜெட் உரையை தயாரிக்கும் போது பண்டைய தமிழகத்தில் இருந்த சங்ககாலப் புலவர்கள் எழுதிய பாடல்வரிகளை மேற்கோள் காட்டியே பட்ஜெட் உரையை வாசிக்கின்றனர். இது தமிழர்களாகிய நமக்குப் பெருமையே. தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக பதவியேற்றதில் இருந்து, தனது பட்ஜெட் உரையை வாசிக்கும் போது ஏதாவது ஒரு சங்ககாலப் பாடல் வரிகளை மேற்கோள்காட்டியே வாசித்து வருகிறார். 

2019 மத்திய பட்ஜெட்: 

மத்திய நிதியமைச்சர் கடந்த 2019ஆம் ஆண்டு தனது முதல் பட்ஜெட் உரையை வாசிக்கும்போது, புறநானூற்று பாடலாசிரியர் பிசிராந்தையார் எழுதிய பாடல்களில் ஒன்றை மேற்கோள் காட்டினார்.

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்
நூறு செறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய் புகுவதனினும் கால் பெரிதும் கெடுக்கும்

என்ற பாடல் வரிகளை மேற்காட்டினார். அதாவது ஒரு வயலில் விளைந்து முற்றி காய்ந்திருக்கும் நெல்லை அறுத்து அரிசி உணவாக கவளமாக்கி யானைக்கு தந்தால் அது பல நாட்களுக்கு வரும், மாறாக, அந்த நிலத்தில் யானையே புகுந்து கபளீகரம் செய்தால், அந்த யானையின் புகும் நெற்பயிரைக் காட்டிலும் அதன் காலில் மிதிபட்டு வீணாகும் நெல் அதிகமாகும், இந்த நெறிமுறையை அறிந்து நாடாளும் மன்னன் வரி வாங்கும்போது நாட்டின் செல்வ வளம் பெருகும் என்று அதற்கு விளக்கமளித்தார்.

மத்திய பட்ஜெட் 2020-21: 

அதே போல் கடந்த 2020ஆம் ஆண்டு பட்ஜெட் உரையை வாசிக்கும் போது, திருக்குறளில் உள்ள முக்கியமான பாடலை மேற்கோள் காட்டி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து

என்ற குறளை வாசித்து, நோயில்லாதிருத்தல், செல்வம், விளைபொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் என இந்த ஐந்தும் நாட்டிற்கு மிக்க அழகாகும் என்று விளக்கம் அளித்தார்.

ஆத்திச்சூடி சொன்ன நிர்மலா சீதாராமன்: 

அதோடு, ஔவையாரின் ஆத்திசூடி என்ற நன்னெறியில் வரும் ‘பூமி திருத்த உண்’ என்ற வரியை மேற்கோள் காட்டி, விளைநிலத்தை உழுது அதில் பயிர் செய்து உண் என்று பொருள், அது போலத்தான் நமது மோடி அரசும் செயல்படுவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

திருக்குறள்: 

கடந்த 2021ஆம் ஆண்டு பட்ஜெட் உரையை வாசிக்கும் போது, மீண்டும் திருக்குறளில் வரும் இறைமாட்சி என்னும் அதிகாரத்தில் உள்ள குறளை மேற்கோள் காட்டினார்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

 என்று கூறி, பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருட்களைச் பத்திரமாக சேர்த்தலும், காத்து அவற்றை முறையான வழிகளில் செலவு செய்தலும் வல்லவன் அரசன் என்று விளக்கம் அளித்தார். அதாவது, முன்கூட்டியே சரியாகத் திட்டமிடல், உற்பத்தி செய்தல், சேமித்தல், முதலீடு செய்தல் என இந்த நான்கையும் மன்னன் செய்ய வேண்டும் என்பதை இக்குறள் வலியுறுத்துகின்றது. அது மாதிரியே தமது மோடி அரசும் சரியாகத் திட்டமிட்டு வரி விதிப்பில் செயல்பட்டு வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2022ல் எதிர்பார்ப்பு 

இப்படி ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் உரையை வாசிக்கும் போது நிர்மலா சீதாராமன் சங்ககாலப் பாடல்களையும் திருக்குறளையும் மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை முடித்தார். அதே போல் நடப்பு 2022ஆம் ஆண்டு பட்ஜெட் உரையை வாசிக்கும் போதும் நிச்சயமாக சங்ககாலப் பாடல் வரிகளையோ அல்லது திருக்குறளில் உள்ள பாடலையோதான் நிச்சயம் மேற்கோள் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மகாபாரத ஸ்லோகம்: 

அனைவரும் எதிர்பார்த்தது போலவே, நிர்மலா சீதாராமன், கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யும் போது மகாபாரதத்தின் சாந்தி பார்வ அத்தியாயத்திலிருந்து ஒரு ஸ்லோகத்தை குறிப்பிட்டார்
"அரசனானவன் குடியானவர்களின் நலனை உறுதி செய்ய சிறிதும் சுணக்கமின்றி அத்தனை ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். தர்மத்தின் வழியில் ஆட்சி நடத்த வேண்டும். தர்மத்தின் வழிநின்றே வரி வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், நமது இந்தியா மகாபாரதம் போன்ற புராதான நூல்களில் இருந்து பெற்ற ஞானத்தின்படியே வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்று குறிப்பிட்டார்.

2023 மத்திய பட்ஜெட்: 

கடந்த 2023-24ஆம் ஆண்டுகான மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்(Finance Minister Nirmala Sitharaman) தனது உரையை வாசிக்கும் போது என்ன சொல்லி வாசிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் திருக்குறள் எதுவும் சொல்லாமல் பட்ஜெட் உரையை முடித்தது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அது குறித்து விமர்சனத்தையும் முன் வைத்தனர். 


2024  பொது பட்ஜெட்:  

லோக்சபா தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம்   இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன் தேர்தல் நேரம் என்பதால் பெரிய அளவில் எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிர்மலா சீதாராமன் பல்வேறு வரி அறிவிப்புகளை வெளியிடும் அதே நேரத்தில் இன்று என்ன இலக்கிய வரிகளை கோடிட்டு காட்டப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow