யானைகளை புதிய மறுவாழ்வு மையத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை - தமிழக அரசு
திருச்சி எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள யானைகளை புதிதாக அமைக்கப்படும் சாடிவயல் யானைகள் முகாமுக்கு மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை முறையான பராமரிக்காததால் அடுத்தடுத்து யானைகள் மரணமடைந்து வருவதாகக் கூறி, எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை முறையாக பராமரிக்கும் வகையில் செயல்பாட்டு வழிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையத்தின் நிறுவனர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, எம் ஆர் பாளையத்தில் உள்ள யானைகளை மத்திய அரசின் அனுமதி இல்லாமல் சாடிவயல் யானைகள் முகாமுக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை மறுத்த தமிழக அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர், எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் சாடி வயல் யானைகள் முகாமுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டதாகவும், சுமார் 8 கோடி ரூபாய் செலவில் சாடிவயலில் யானைகள் முகாம் அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேசமயம், எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்படும் யானைகளை, சாடிவயல் முகாமுக்கும் மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் மத்திய அரசின் அனுமதியில்லாமல் யானைகளை மாற்றப்பட மாட்டாது எனவும் அரசுத்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சாடிவயல் யானை முகாமுக்கு பெறப்பட்ட அனுமதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்
இதற்கிடையில், எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள யானைகளின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
What's Your Reaction?