தகைசால் தமிழர் விருது வழங்கியது எனக்கு கிடைத்த பெருமை.. நல்லகண்ணுவிற்கு ஸ்டாலின் புகழாரம்
நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கியதே தனக்கு கிடைத்த பெரிய பாக்கியம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நல்லகண்ணுவிற்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து, அவரின் தியாகங்களை உள்ளடக்கிய சிறப்புப் பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தோழர் நல்லக்கண்ணுவின் வாழ்த்தை விட மிகப்பெரிய ஊக்கம் எங்களுக்கு கிடைக்கப் போவதில்லை. பெரியார், கலைஞருக்கு கிடைக்காத பாக்கியம் நல்ல கண்ணுவிற்கு கிடைத்துள்ளது. நூறு வயதை கடந்தும் நமக்கு வழிகாட்டியாகவும், தமிழ் சமூதாயத்திற்கு உழைக்கவும் தயாராக இருக்கிறார்.
எல்லோரையும் ஒன்றாக்கி இருப்பது தோழர் நல்லகண்ணுவின் தியாகம். 2001-ல் அதிமுக ஆட்சியில் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அதை கண்டித்து முதன் முதலில் தோழர் நல்லகண்ணு அறிக்கை வெளியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் அவர் கருணாநிதியின் கைதை கண்டித்தார்.
நல்லகண்ணுவிற்கு கலைஞர் அம்பேத்கர் விருது வழங்கினார். நான் தகைசால் விருது வழங்கினேன். நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கியதே எனக்கு கிடைத்த பாக்கியம். அம்பேத்கர் விருது வழங்கும் போது தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இதில், ஐம்பதாயிரம் ரூபாயை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மீதமுள்ள பணத்தை விவசாய சங்கத்திற்கும் கொடுத்தார் நல்லகண்ணு. தகைசால் விருது பெற்ற போது தமிழ்நாடு அரசு சார்பில் பத்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அப்போது, பத்து லட்சம் ரூபாயுடன் ஐந்தாயிரம் சேர்த்து பத்து லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசிற்கு நிவாரணமாக வழங்கினார் நல்லகண்ணு.
நல்லகண்ணு கட்சிக்காவே உழைத்தார். உழைப்பால் வந்த பணத்தை கட்சிக்காவே கொடுத்தார். அதனால் தான் வரலாற்றில் உயர்ந்து நிற்கிறார். சாதியவாதம், வகுப்பு வாதம், பெரும்பான்மை அதிகாரம், மேலாதிக்கம் அனைத்திற்கும் எதிராக ஜனநாயக சக்திகள் ஒற்றுமையுடன் பணியாற்றுவதுதான் தோழர் நல்லகண்ணுவிற்கு நாம் கொடுத்திடும் நூற்றாண்டு பரிசாகும்.
What's Your Reaction?