டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கு.. உயர்நீதிமன்றம் உத்தரவு

உணவு மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில், தமிழக டிஜிபி மற்றும் டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jan 23, 2025 - 14:15
 0
டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கு.. உயர்நீதிமன்றம் உத்தரவு
டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில், தமிழக டிஜிபி மற்றும் டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியடைந்துள்ளதால் மக்கள் இருந்த இடத்தில் இருந்து அனைத்து பொருட்களையும் வாங்கி வருகின்றனர். முன்னர் கடை கடையாக சென்று பார்த்து பார்த்து மக்கள் பொருட்கள் வாங்கி வந்தனர். ஆனால், தற்போது இருந்த இடத்தில் இருந்து தங்களது செல்போன்கள் மூலம் உணவு பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை ஆடர் செய்து பத்து நிமிடங்களில் வாங்கி வருகின்றனர்.

இதற்காக பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு செயலிகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மக்கள் அதிகப்படியான நேரத்தை சேமிப்பதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் இந்த செயலிகள் மூலம் பல மோசடிகள் நடைபெறுகின்றன. உணவு மற்றும் மளிகை பொருட்களை டெலிவரி செய்வதாக கூறி பலர் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.

இந்நிலையில்,  உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யும் தனியார் நிறுவனங்களின் டெலிவரி நபர்களை கண்காணிக்க விதிகளை வகுக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் புதுக்கோட்டையைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நபர்களுக்கு சீருடை இருந்தாலும் கூட, அவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய அடையாள அட்டை ஏதும் அவர்களுக்கு இல்லை என சுட்டிக்காட்டி உள்ளார். பெரும்பாலும் டெலிவரி செய்யும் நபர்கள் ஹெல்மெட் அணிந்து வருவதால் அவர்களை அடையாளம் காண்பது இயலாததாக ஆகி விடுகிறது எனவும் சென்னையில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர் ஒருவர், டெலிவரி நிறுவனங்களில் சீருடையை அணிந்து வந்தவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

டெலிவரி  ஆட்கள் போல் நடித்து  குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், டெலிவரி நபர்களை கண்காணிக்க, முறைப்படுத்த விதிகளை வகுக்கும்படி டிஜிபிக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக டிஜிபிக்கும், ஸ்விகி, சுமோட்டோ, டன்ஸோ, செப்டோ போன்ற டெலிவரி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow