Anura Kumara Dissanayake : இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக - பொருளாதார நெருக்கடி தீருமா?

Sri Lanka New President Anura Kumara Dissanayake : இலங்கையின் புதிய அதிபராக அநுர குமார திசநாயக இன்று பதவியேற்றார். இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றதை இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்றார்.

Sep 23, 2024 - 10:35
Sep 23, 2024 - 16:22
 0
Anura Kumara Dissanayake : இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக - பொருளாதார நெருக்கடி தீருமா?
anura kumara dissanayake sworn sri lanka president

Sri Lanka New President Anura Kumara Dissanayake : இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி முன்னணியின் வேட்பாளரும் தேசிய மக்கள் சக்தி தலைவருமான அநுரா குமார திசநாயக இன்று அதிபராக பதவியேற்றார். இலங்கையின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும். அது யாருக்கும் கிடைக்காததால், முதல் இரண்டு இடங்களை பிடித்த அநுர குமார திசநாயக(Anura Kumara Dissanayake) மற்றும் சஜித் பிரேமதாசா ஆகியோரது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. நேற்று 2ம் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், இதில் அனுர குமார திசநாயகே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனையொட்டி கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் அனுர குமார இன்று ( செப்டம்பர் 23) இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார்.இவர் இலங்கையின் 9வது அதிபர் ஆவார். 

கொழும்புவில் இருந்து 170 கி.மீ தொலைவில் உள்ள அநுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம பகுதியில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி பிறந்தவர் அநுர குமார திசநாயக்க(Anura Kumara Dissanayake). தம்புத்தேகம கமினி மகா வித்யாலயாவிலும் தம்புத்தேகம மத்திய கல்லூரியிலும் படித்த அநுர குமார திசநாயக்க, அங்கிருந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். தனது 19வது வயதில் இலங்கையின் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் இடதுசாரிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவில் இணைந்தார். 

கடந்த 1995ஆம் ஆண்டு அவரை சோஷலிச மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக ஜே.வி.பி. நியமித்தது. அக்கட்சியின் மத்திய பணிக் குழுவிலும் அவருக்கு இடம் அளிக்கப்பட்டது. கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுன மூலமாக நாடாளுமன்றத்திற்குள் எம்.பியாக நுழைந்தார் அநுர குமார. 2001ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் வென்று எம்.பி ஆனார்.

கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 39 இடங்கள் அக்கட்சிக்குக் கிடைத்தன. குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட அநுர குமார திசநாயக, 1,53,868 வாக்குகளை பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் சென்றார்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த ஜே.வி.பியின் தேசிய மாநாட்டில், அக்கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் அநுர குமார திசநாயக(Anura Kumara Dissanayake). அதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து 2019ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 2019ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அநுர குமார திசநாயக்க முதல் தடவையாகப் போட்டியிட்டார். அப்போது வெறும் 3.1 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடித்தார்.

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசநாயக 57,40,179 வாக்குகள் (55.89%)பெற்று வெற்றி பெற்று 9வது அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.வெற்றி பெற்ற பிறகு அநுர குமார திசநாயகே அளித்துள்ள பேட்டியில், எந்த நாடும் எந்த அரசியல் தேவையுடன் காய்களை நகர்த்தினாலும் எமது நாட்டு மக்கள்தான் தீர்மானிப்பார்கள். அதனால் மக்களின் மனங்களிலுள்ள அவர்களின் தேவைகளை எவராலும் மாற்றியமைக்க முடியும் என நாங்கள் நம்பமாட்டோம். இந்த புதிய நிலை மாற்றம் மக்களுக்கே தேவைப்பட்டிருக்கிறது. சில நேரங்களில் அரசியல் கட்சிகளின், கட்சித் தலைவர்களின் கடமைகள் என்ற எல்லாவற்றையும் விஞ்சி சென்று பொதுத்தேவையாக மாறியிருக்கிறது என்று கூறியுள்ளார்.இவரது வெற்றி இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்குமா? ஈழத்தமிழர்களுக்கு அதிகார பகிர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow