Srilanka Election: இலங்கையின் 9வது அதிபராகும் அநுர குமார திசநாயக... புதிய வரலாற்று சாதனை!

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அநுர குமார திசநாயக வெற்றிப் பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sep 22, 2024 - 21:29
 0
Srilanka Election: இலங்கையின் 9வது அதிபராகும் அநுர குமார திசநாயக... புதிய வரலாற்று சாதனை!
இலங்கை அதிபராகும் அநுர குமார திசநாயக

சென்னை: இலங்கை அதிபர் தேர்தலில் கடும் இழுபறி நீடித்த நிலையில், அநுர குமார திசநாயக வெற்றிப் பெற்றுள்ளார். 2-வது விருப்ப வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில், அநுர குமார திசநாயக வெற்றிப் பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கையின் 9-வது அதிபர் தோ்தல் நேற்று (செப்.21) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 1 கோடியே 40 லட்சம் பேர் தேர்தலில் வாக்களித்தனர். அதன்படி சுமார் 75% வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. 

இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டன. இந்நிலையில், தொடக்கம் முதலே அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசநாயகே முன்னிலை பெற்றார். ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் பின்னடைவை சந்தித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், 56 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகளை அநுர குமார திசநாயக பெற்றார். இதன்மூலம், முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவை விட, 10 சதவிகிதத்துக்கும் கூடுதலாக வாக்குகளை அவர் பெற்றார்.

அதன்படி அநுர குமார திசநாயக வெற்றிப் பெற்றதாக இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நாளை (செப் 23) எளிமையான முறையில் பதவியேற்பு நடைபெற உள்ளதாகவும், அதில் அநுர குமார திசநாயக இலங்கை அதிபராக பதவியேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தற்போது நடைபெற்ற தேர்தலில் எந்த வேட்பாளர்களும் பெரும்பான்மை பெறவில்லை. இதனால் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது வாக்கு எண்ணிக்கை எனப்படும் வாக்காளர்களின் விருப்ப வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்றன. 

அதில் ரணில், நமல் ராஜபக்சே, அரியநேந்திரன் உட்பட தேர்தலில் போட்டியிட்ட 36 வேட்பாளர்களும் போட்டியிலிருந்து வெளியேறினர். முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அநுர குமார திஸநாயக, சஜித் பிரேமதாச இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது. இதில், மொத்தம் 5,634,915 வாக்குகளுடன் அதாவது 42.31% வாக்கு சதவிகிதத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக வெற்றிப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக முன்னிலை சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளுடன் 32.76% வாக்கு சதவிகிதத்தில் இரண்டாவது இடம் பெற்றுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow