பள்ளியில் வளைகாப்பு நடத்திய மாணவிகள்..ஆசிரியை பணியிடை நீக்கம்.. போராட்டத்தை கையில் எடுத்த பிற ஆசிரியர்கள்
பள்ளியில் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்தி அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்-ஆக மாணவிகள் பதிவிட்டதால் , வகுப்பு ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்து போராட்டம்.
பள்ளியில் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்தி அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்-ஆக மாணவிகள் பதிவிட்டதால் , வகுப்பு ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்து போராட்டம்.
வேலூர் மாவட்டத்தில் அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களில் கூட்டமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் முதல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வரை உள்ள 24 இயக்கங்களை சார்ந்த ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செ.நா.ஜனார்த்தனன், முகமது ஷாநவாஸ், ஜோசப் அன்னையா ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது
வேலூர் மாவட்டத்திலுள்ள ஓர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயிலும் மாணவிகள் சிலர் கும்பலாகச் சேர்ந்து பள்ளியின் மேல்தளத்துக்குச் சென்று ஒரு மாணவிக்கு `வளைகாப்பு’ நிகழ்ச்சி நடத்துவதைபோல ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்திருந்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரலானது. மாணவிகள் பள்ளி சீருடையில் இருக்கின்றனர். அதில் ஒரு மாணவிக்கு மட்டும் புடவை அணிவிப்பதைபோல துப்பாட்டாவைச் சுற்றிவிட்டு, வயிற்றுப் பகுதியிலும் துணியை மறைத்து கர்ப்பிணிபோல நடித்துகாட்டச் செய்கின்றனர். மற்ற மாணவிகள் தாம்பூலத்தில் ஆரத்தி எடுத்து சந்தனம் பூசி, நலங்கு வைப்பதைபோல காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த வீடியோவை கவனித்த வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதனையடுத்து மாணவிகளை கவனிக்கத் தவறியதாக கூறி வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரி என்பவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதனால், மாணவிகள் செய்த தவறுக்கு ஆசிரியை தண்டிக்கப்பட்டதை கண்டித்து அனைத்து வகை ஆசிரியர்கள் இன்று வேலூர் மாவட்டத்தில் ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிவதாக இந்த கூட்டத்தில் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: உலக பிரசித்தி பெற்ற குலசை தசரா திருவிழா... அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றம்!
இதனைத் தொடர்ந்து இன்று காட்பாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பள்ளியின் வாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று மாலை 05.00 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து முறையிடுவது எனவும் ஆசிரியரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யும் வரை பல்வேறு வகைகளில் போராட்டம் தொடரும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?